மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 19 பேர் அதிரடி இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, சென்னை பெருநகர வளர்ச்சி முகமையின் முதன்மைச் செயல் அலுவலராக இருந்த எஸ்.பி. கார்த்திகா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய எஸ். வளர்மதி, வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் இருந்த ஆர். சதீஷ், சேலம் பட்டுவளத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி ஆணையராக இருந்த மோனிகா ராணா தென்காசி மாவட்ட ஆட்சியராகவும், கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சி. முத்துக்குமரன் திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுநரின் துணைச் செயலாளராக (பல்கலைக்கழகங்கள்) இருந்த எஸ். பிரசன்ன ராமசாமி, கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு முதன்மை நிர்வாக அதிகாரியாக இருந்த எம். இந்துமதி, போக்குவரத்துத் துறை துணைச் செயலாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலராக (அம்மா உணவகம்) இருந்த எஸ். சங்கீதா, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுப் பணிகள் திட்ட இயக்குநராகவும், சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி என். காளிதாஸ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்கக கூடுதல் இயக்குநராகவும் (பொது) நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் சப்-கலெக்டராக இருந்த ஆர். வெங்கடேஷ்வரன், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சப்-கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுப் பணிகள் இயக்குநராக இருந்த கே. சாந்தி, வெளிநாடு வாழ் மனிதவளக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மனிஷ் எஸ். நாரணவரே, தமிழ்நாடு ஃபைபர்நெட் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநராக இருந்த ஆர். பிரியா, சேலம் சாகோசர்வ் மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு பொது மேலாளராக இருந்த ஆர். ராஜகிருபாகரன், அதன் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரக இணை ஆணையராக இருந்த கே. பிரியா, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ளார். தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக  பொது மேலாளராக இருந்த எம். மணிமேகலை, தமிழ்நாடு நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் இயக்கக இணை இயக்குநராக இருந்த ஏ. மீனா பிரியா தர்ஷினி, குன்னூர் டான்டீ மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) இருந்த டி. செங்கோட்டையன், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின்  முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இணை ஆணையராக இருந்த எஸ். சாந்தி, சென்னை பெருநகர வளர்ச்சி முகமையின் முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.