ஐந்து முறை தொடர்ந்து வெற்றிபெற்று ஆறாவது முறையாக பாலகோட்டில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக, முன்னாள் எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமாரை தி.மு.க நிறுத்தியுள்ளது.

“பாலக்கோடு தொகுதி எப்போதுமே அ.தி.மு.க-வின் கோட்டை. இதுவரை நடந்த 13 தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.க வென்றுள்ளது (ஜெ அணி வென்றதையும் சேர்த்து). அதில், 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று வரும் தொகுதியின் செல்லப் பிள்ளையான அன்பழகனை யாராலும் தோற்கடிக்க முடியாது’ என்று அ.தி.மு.க-வினர் அடித்துச் சொல்ல, “25 ஆண்டு காலமாக எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்த அன்பழகனால், பாலக்கோடு தொகுதி எந்த வளர்ச்சியும் அடையாமல் உள்ளது. இம்முறை மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று தி.மு.க-வினர் மறுபுறம் கூற, பாலக்கோடு தொகுதி பரபரத்து கிடக்கிறது.
3 பேரூராட்சிகளோடு நூற்றுக்கணக்கான கிராமங்களைக் கொண்ட பாலக்கோடு தொகுதியைச் சுற்றி வந்தோம்.
நம்மிடம் பேசிய காரிமங்கலம் விவசாயி மாதேஷ்வரன், “இங்கு கரும்பு, மா, தக்காளி விவசாயம் அதிகமாகவும், சிறுதானியங்கள், நெல், தென்னை விவசாயம் ஓரளவும் நடக்கிறது. ஆனால், ஒரு பகுதி மட்டும்தான் பாசன வசதி பெறுகிறது.
மற்ற பகுதிகள் மழையை நம்பியுள்ளது. அப்படியிருந்தும் பாலக்கோடுதான் தமிழகத்திலேயே தக்காளி சாகுபடி அதிகம் நடைபெறும் பகுதியாக உள்ளது. தனியார்கள் கொள்முதல் செய்வதால், நியாயமான நிலையான விலை கிடைப்பதில்லை; இருப்பு வைக்க போதிய வசதி இல்லாததால், விவசாயிகள் நஷ்டம் அடைகிறார்கள்.
