கேரளாவின் மூணாறில் நிலச்சரிவு அபாயம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

-நமது நிருபர்-

கேரளாவில் முக்கிய சுற்றுலா பகுதியான மூணாறு, மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ்ந்த மலை பகுதியாகும். உலக அளவில் சுற்றுலாவில் பிரசித்து பெற்ற மூணாறை தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படுகிறது. இங்கு தென்மேற்கு பருவ மழை சராசரி 338 செ.மீ., முதல் 350 மி.மீ., வரை பதிவாகும்.

சமீபகாலமாக ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரையிலான பருவ மழை கால அளவில் மழையால் சேதங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மண் மற்றும் நிலச்சரிவுகள் மூலம் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஆரம்ப காலங்களில் மழை அதிகம் பெய்தபோதும் பாதிப்புகள் பெரிதாக ஏற்படவில்லை. காடுகள், வனங்கள் அழிப்பு, முறையற்ற கட்டுமானங்கள், நீர் தடங்கள் ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு விதிமுறை மீறல்கள் மண் மற்றும் நிலச்சரிவுக்கு காரணமாகும்.

இயற்கையான சுற்றுச் சூழல் கொண்ட நிலத்தின் தன்மையை உணராமல் நடக்கும் கட்டுமானங்கள் நிலச்சரிவுக்கு வழி வகுக்கின்றன.

அதற்கு எடுத்துக்காட்டாக மூணாறில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் தேவிகுளம் ரோட்டில் மலை மீது செயல்பட்ட அரசு கல்லூரி கட்டங்கள் நிலச்சரிவில் சிக்கி 2005ல் சிறிய அளவிலும், 2018ல் முற்றிலுமாக சேதமடைந்தன. தற்போது கல்லூரி வேறு பகுதியில் செயல்படுகிறது.

மூணாறைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளவை என்றபோதும், சமீபகாலமாக கொச்சி, தேசிய நெடுஞ்சாலையில் மண் மற்றும் நிலச்சரிவுகள் அதிகரித்து வருகின்றன. ரோடு அகலப்படுத்துவதற்கு அறிவியல் ரீதியில் சரிவான முறையில் மண் எடுக்காமல் செங்குத்தாக மண் எடுக்கப்பட்டதால் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக மூணாறு அருகே கேப் ரோட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பாறைகள் உடைக்கப்பட்டதால், ஏற்கனவே அங்கு நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் உள்ளது. அதேபோல் நகரை ஒட்டியுள்ள அந் தோணியார் காலனியில் குடியிருப்புகளுக்கு கீழ் நீரோட்டம் உள்ளதால், நிலச்சரிவு அபாயம் உள்ளது. அதனால் அதிகமாக மழை பெய்யும்போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படும் நடைமுறை இந்தாண்டு பருவ மழையின்போதும் நடந்தது.

அங்கு நில அதிர்வு உள்பட காலநிலையை முன்கூட்டியே அறியும் வகையில் அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் வயர்லஸ் நெட் ஒர்க் மையம் சார்பில் கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 1924ல் ஜூலையில் பெய்த கன மழையில் மூணாறு நகர் அழிந்ததுடன் சுற்றிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது சரக்குகளை கையாள பயன்படுத்திய ரயிலின் பாதை, பாலங்கள் ஆகியவை சீரமைக்க இயலாத அளவில் சேதமடைந்தன. அதன் பிறகு ரயில் சேவை முடங்கிய நிலையில், தற்போது தண்டவாளங்கள் மின் கம்பங்களாக சாட்சியம் வகிக்கின்றன.

அதன்பிறகு பல முறை பாதிப்புகள் ஏற்பட்டபோதும், கடந்த 20 ஆண்டுகளில் பருவ மழை காலங்களில் பல பாதிப்புகள் ஏற்பட்டன. அவற்றில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆக.6ல் ரயில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்பட 70 தமிழர்கள் இறந்த துயர சம்பவம் கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களை உலுக்கியது. அதன் பிறகு பருவ மழை துவங்கி விட்டால் தொழிலாளர்கள் இடையே இனம் புரியாத அச்சம் தொற்றி கொள்ளும்.

நிலச்சரிவு அபாயம்

மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகள், மூணாறு காலனி, எம்.ஜி., காலனி, கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரசு தாவரவியல் பூங்கா அருகே பழைய கல்லூரி பகுதி, தேவிகுளம் இறைச்சல்பாறை, கேப் ரோடு, பழைய மூணாறு சி. எஸ்.ஐ. சர்ச், பள்ளிவாசல் எஸ்டேட் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் உள்ளது.

அதனை வரும் காலங்களில் தவிர்க்கும் வகையில் சுற்றுச் சூழலை பாதுகாத்து, நீர் தடங்களை சீரமைத்து, கட்டுமானங்களை முறைபடுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Source link