துாத்துக்குடி: கடந்த முறை உறுதிமொழி படிவம் வழங்காமல், திருச்செந்துார் கோவிலில் தரிசனம் செய்து சர்ச்சையில் சிக்கிய, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவரான தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், நம் நாளிதழ் சுட்டிக்காட்டியதன் எதிரொலியாக, கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ஸ்ரீநாத், உறுதிமொழி படிவத்தில் முறைப்படி கையெழுத்திட்டார்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நவ., 10ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் விஷு மகாஜன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்றார். அவர் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஸ்ரீநாத், அக்., 10ம் தேதி கோவிலுக்குள் சென்றபோது, ‘ஹிந்து மதத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்’ என்ற உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திடவில்லை.
அவரிடம் கையெழுத்து பெறாமல் தரிசனம் செய்ய அனுமதித்த அதிகாரிகள் மீது விமர்சனம் எழுந்தது. இதுதொடர்பாக, நம் நாளிதழில் அக்., 18ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், கோவிலில் தரிசனம் செய்த ஸ்ரீநாத், அதிகாரிகளிடம் உறுதிமொழி படிவத்தை கேட்டு பெற்று கையெழுத்திட்டார்.அதுமட்டுமின்றி, அவருடன் சென்ற கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த த.வெ.க., நிர்வாகிகளையும் கையெழுத்திட்ட பின்னரே, சுவாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றார்.
