எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவிற்கு அமெரிக்காவு ஆதரவு; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

நமது நிருபர்

இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் வாயிலாக, இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் செபு நகரத்தில், ‘ஆசியான்’ அமைப்பின் உறுப்பு நாடுகள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இடையே நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், அமெரிக்க போர் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்தும் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் தற்போதைய நிலவரம் மற்றும் மாறி வரும் பிராந்திய பாதுகாப்பு சூழல் குறித்து இருவரும் ஆலோசித்தனர். இந்த சந்திப்பு குறித்து சமூக வலைதளத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அமைச்சருடனான பேச்சு சிறப்பாக அமைந்தது. இரு நாடுகளின் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு மற்றும் ராணுவ தளவாட உற்பத்தியில் ஒருங்கிணைப்பை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்தோம்’ என கூறியுள்ளார்.

அமெரிக்க போர் துறை அமைச்சர் ஹெக்சேத் வெளியிட்ட பதிவில், ‘இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தது மகிழ்ச்சி. இரு நாடுகளின் முக்கிய ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடினோம். மேலும், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தோம்’ என தெரிவித்தார்.

பயங்கரவாத அமைப்புகளுக்குப் புகலிடம் தரும் நாடுகளுக்கு எதிராக உலக நாடுகள் எந்தவொரு சமரசமும் இல்லாத, கடுமையான அணுகுமுறையைக் கையாள வேண்டும்; பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும், பயிற்சி அளிக்கும் அல்லது நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்

என ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2015ல் இந்தியாவை முக்கிய ராணுவ கூட்டாளியாக அமெரிக்கா அங்கீகரித்தது. இதன் மூலம் முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகின.

Source link