திருப்பூர்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலக்கடலை கிலோ ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நிலக்கடலை சாகுபடி
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம், காரத்தொழுவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிணற்று பாசனம், அமராவதி ஆற்றுப் பாசனங்களை நம்பி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயிர்கள் நன்கு வளர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதையடுத்து தோட்டத்தில் இருந்து நிலக்கடலையை அறுவடை செய்து, காயவைக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கடலை எண்ணெய் பயன்பாடு பலமடங்கு அதிகரிப்பு
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நிலக்கடலை மற்றும் கடலை பருப்பின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பண்டிகை காலத்தில் வீடுகள், பேக்கரிகள் மற்றும் தின்பண்ட கடைகளில் முறுக்கு, கார வகைகள் தயாரிப்பதற்கு கடலை எண்ணெய்யின் பயன்பாடு பலமடங்கு அதிகரிக்கும்.
அதிக அளவு ஆர்டர்
இதன் காரணமாக கடலை எண்ணெய் ஆலை உரிமையாளர்களும் நிலக்கடலையை போட்டி போட்டுக்கொண்டு கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் நொறுக்கு தீனி தயாரிக்கும் சிறிய அளவிலான குடிசை தொழில் நிறுவனங்களில் இருந்தும் தோல் உரித்த நிலக்கடலை பருப்பிற்கு அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.
பண்டிகை கால தேவை அதிகரிப்பு
இதன் காரணமாக மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சந்தைக்கு வரும் நிலக்கடலை உடனுக்குடன் விற்பனையாகி விடுகிறது. சில இடங்களில் மட்டுமே நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் சந்தைக்கு வரத்து குறைவாகவும், பண்டிகை கால தேவை அதிகமாகவும் உள்ளது. இதனால் நிலக்கடலையின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
விலை உயர வாய்ப்பு
தற்போதைய சந்தை நிலவரப்படி 100 கிலோ எடை கொண்ட காய்ந்த நிலக்கடலை மூட்டை ரூ.8 ஆயிரத்து 800 முதல் ரூ.9 ஆயிரத்து 600 வரை விற்பனையாகிறது. எண்ணெய் ஆலை ரக நிலக்கடலை 100 கிலோ மூட்டை ரூ.7 ஆயிரத்து 600 முதல் ரூ.8 ஆயிரத்து 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் பச்சை நிலக்கடலை கிலோ ரூ.85 முதல் ரூ.95 வரையும், பருப்பு ரூ.140 முதல் ரூ.165 வரையும் விற்பனையாகி வருகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
பண்டிகை கால தேவை இன்னும் சில நாட்களுக்கு உச்சத்தில் இருக்கும் என்பதால், நிலக்கடலை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
