-நமது நிருபர்-
அனைத்து துறையிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருந்து வருகிறது. இதன் தாக்கத்தால் முன்னணி ஐடி நிறுவனத்தில் கூட பணிநீக்கம் தொடர்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
கணினியில் செய்யப்படும் எந்தவொரு வேலைக்கும் கூட ஏஐ தொழில்நுட்பம் மிகவும் பேருதவியாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. ஏஐ தொழில்நுட்பத்தின் செயல்பாடு குறித்து ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு முக்கிய தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
அவரது பதிவு: கணினியில் செய்யப்படும் எந்தவொரு பணியிலும் இப்போது ஒரு ஆபத்து உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு திறமையான நபர் 10 பேர் வேலையை செய்து முடிக்க முடியும்.
இந்த ஆபத்து நாளுக்கு நாள் உண்மையாகி வருகிறது. இதன் பொருள், கணினியில் பணிபுரியும் 90 சதவீத மக்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்று அர்த்தமல்ல.
உதாரணமாக, முன்பு மென்பொருள் பொறியாளர்களையோ அல்லது டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் நிபுணர்களையோ பணியமர்த்தும் வசதி இல்லாத தொழில்துறைகள், இப்போது அவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள முடியும்.
பொருளாதாரத்தில் ஒரு மறுசீரமைப்பு நிகழப்போகிறது என்பதுதான்; இத்தகைய மாற்றத்தைச் சந்திக்கும் காலம் சற்று கடினமானதாகவே இருக்கும். நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம், இந்த மாற்றம் வரப்போகிறது என்பதை ஏற்றுக்கொண்டு, அதற்குத் தயாராவது தான். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறினார்.
