இந்தியாவில் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும் (எம்.ஆர்.பி), சில்லறை விற்பனையாளர்கள் அவற்றை வாங்கும் விலைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி குறித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசால் இந்தக் “கொள்ளையை” நியாயப்படுத்த முடியுமா என்றும், தயாரிப்பாளர்கள் “கட்டுப்பாடின்றி இயங்க” அனுமதிக்க முடியுமா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய மருந்து விலை நிர்ணய அதிகார அமைப்பின் (என்.பி.பி.ஏ) செயல்பாட்டை விமர்சித்ததுடன், அது “முற்றிலும் முடங்கிய” ஒரு அமைப்பு என்றும் கூறியது. மேலும், மருந்து விலை நிர்ணய முறை ஏன் மருந்து தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சாதகமாக செயல்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியது. மருந்துகளின் விலை நிர்ணயம் மற்றும் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பது தொடர்பான இரண்டு மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மருந்துகளின் அதிக இடைவெளி குறித்து நீதிமன்றம் கேள்வி
விசாரணையின் போது, சில்லறை விற்பனையாளர்களால் ரூ.15-க்கு வாங்கப்படும் ஒரு மருந்தின் அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி) ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள உதாரணத்தை சுட்டிக்காட்டிய அமர்வு, இந்த முரண்பாட்டைக் கேள்வி எழுப்பியது. “இந்தக் கொள்ளைக்கு உங்களால் ஏதேனும் நியாயமான காரணத்தைக் காட்ட முடியுமா? அரசு இதை அனுமதிக்கிறது. அரசின் கண் முன்னாலேயே இது நடக்கிறது” என்று சாடியது.
ஒழுங்குமுறை கட்டுப்பாடு தேவை என்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி குறிப்பிட்டபோது, “அவர்களை கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்க வேண்டுமா?” என்று நீதிபதிகள் கேட்டனர்.
மேலும், இந்த அமைப்பு முழுவதும் ஏன் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் செயல்படுகிறது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இருப்பினும், உள்நாட்டு மருந்து சந்தையின் போட்டித்தன்மை மற்றும் பல்வேறு மருந்து பிரிவுகளில் ஏராளமான நிறுவனங்கள் இருப்பதைக் குறிப்பிட்டு, இந்தியாவில் மருந்து விலைகள் உலக அளவில் மிகக் குறைவாகவே உள்ளதாக மத்திய அரசு வாதிட்டது. மேலும், கட்டுப்பாடுகளை நிதானமான முறையில் அணுக வேண்டும் என்றும் ஐஸ்வர்யா பதி வாதிட்டார்.
ஆனால், நோயாளிகளுக்கு விலையைப் பேரம் பேசும் அதிகாரம் இல்லை என்றும், அவர்கள் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அமர்வு சுட்டிக்காட்டியது. “300 சதவீதம், 400 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட விலை இடைவெளி உள்ளது. இந்த வித்தியாசம் ஏன்? இந்த வித்தியாசம் எங்கே போகிறது? இந்த மிகப்பெரிய இடைவெளிக்கு என்ன நியாயம்?” என்று நீதிபதிகள் கேட்டனர்.
‘நோயாளிகளையும் வர்த்தகத்தையும் ஒன்றாக எடைபோடாதீர்கள்’
மருந்துத் துறையின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரக் காரணிகளுக்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “நீங்கள் வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறீர்கள். நோயாளிகளையும் வர்த்தகத்தையும் ஒன்றாக எடைபோடாதீர்கள்” என்றனர்.
“நோயாளிகள் மற்றும் அவர்களின் உயிர்களைப் பற்றிப் பேசும்போது, அதை முதலாளித்துவக் கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா?” என்று கேட்ட அமர்வு, “ஒவ்வொரு மருந்தும் ஜெனரிக் மருந்தாகக் கருதப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றும் கூறியது.
மேலும், புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த மருந்து விநியோகஸ்தர் ஒருவரின் மனைவியிடம், ரூ.11,000-க்கு கிடைக்கும் ஒரு ஊசிக்கு ரூ.1.30 லட்சம் வசூலிக்கப்பட்ட சம்பவத்தையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
“என்றாவது ஒரு நாள் என்.பி.பி.ஏ (NPPA) மூலம் தங்களுக்குப் பலன் கிடைக்கும் என்ற ஏதோ ஒரு பகல் கனவில் தான் பொதுமக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் போலத் தெரிகிறது” என்று அமர்வு குறிப்பிட்டது.
புற்றுநோய் மருந்துகளின் லாப வரம்பு குறித்து கேள்வி
புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை (trade margin) அவற்றின் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்.ஆர்.பி) 30 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு எடுத்த முடிவு குறித்தும் விசாரணையில் கவனம் செலுத்தப்பட்டது. அனைத்து மருந்துகளுக்கும் 16 சதவீதம் என்ற சீரான வர்த்தக லாப வரம்பை ஏன் அமல்படுத்தக் கூடாது என்றும், நடவடிக்கை எடுக்க அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது என்றும் அமர்வு கேள்வி எழுப்பியது.
“நாங்கள் கேள்விகளை எழுப்பத் தொடங்கிய பிறகே அரசு விழித்துக் கொண்டுள்ளது, இப்போது நாங்கள் இதைச் செய்துள்ளோம் என்று கூறுகிறீர்கள்” என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பைக் குறைப்பது குறித்த மத்திய அரசின் பதில் “மகிழ்ச்சியடையும் படியாக இல்லை” என்று நீதிமன்றம் கூறியிருந்தது. மேலும், தயாரிப்பு அடக்கவிலை ரூ.11 ஆக இருக்கும் ஒரு சலைன் பாட்டில் ரூ.270-க்கு விற்கப்பட்ட உதாரணத்தையும் சுட்டிக்காட்டியிருந்தது. புற்றுநோய் மருந்துகளின் இலாப வரம்பில் 30 சதவீதக் வரம்பு விதிப்பதன் மூலம் நோயாளிகளுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.2,500 கோடி சேமிக்கப்படும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மனுக்கள் கோருவது என்ன?
ஒரு மனுவில், அவசியமான மருந்துகளுக்கு சட்டவிரோதமாக அதிக விலை நிர்ணயிப்பதைத் தடுக்கவும், விநியோகச் சங்கிலியில் அதிகப்படியான இலாபத்தைக் கட்டுப்படுத்துவது உட்பட, மருந்துகள் (விலை கட்டுப்பாடு) ஆணை, 2013-ன் கீழ் கடுமையான விலைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் கோரப்பட்டுள்ளது.
மற்றொரு மனுவில், நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைக்காத மருத்துவப் பயிற்சியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.
மருந்துகளின் விலையைக் கண்காணித்து, அவை மலிவு விலையிலும் எளிதாகவும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒரு சுயாதீன ஒழுங்குமுறை அமைப்பாக என்.பி.பி.ஏ நிறுவப்பட்டது.
