அமெரிக்காவில் முறைப்படி தடம் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அமைப்பு: தவறான பிரசாரங்களை முறியடிக்க திட்டம்!

​வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நற்பெயரை பரப்புவதற்கும், அதுகுறித்த தவறான பிரசாரங்களை முறியடிப்பதற்கும், ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ என்ற அமைப்பு, அந்நாட்டு நீதித்துறையில் முறைப்படி பதிவு செய்துள்ளது.

​அமெரிக்காவில் செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள் அல்லது அவற்றின் சார்பாக இயங்கும் குழுக்கள், அந்நாட்டின் ‘வெளிநாட்டு ஏஜென்ட்கள் பதிவுச் சட்டம்’ (FARA) கீழ் பதிவு செய்வது கட்டாயம்.

​இதன்படி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ அமைப்பு, டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையிடத்தை, தனது வெளிநாட்டு முதன்மை அமைப்பாக குறிப்பிட்டு, அமெரிக்க நீதித்துறையிடம் பதிவு செய்துள்ளது.

​அவதூறுகளுக்கு ‘செக்’:

இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில், ‘ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து பரப்பப்படும் முழுமையற்ற, தவறான தகவல்களுக்குச் சரியான விளக்கங்களை அளிப்பது, உண்மை நிலையை அமெரிக்க மக்களுக்கு எடுத்துரைப்பது, கல்வி மற்றும் கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவையே எங்களின் முக்கிய நோக்கம்’ என்று அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், பொது மக்கள், ஊடகவியலாளர்கள், கல்வி நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சட்டப்பூர்வமாகத் தொடர்பு கொண்டு, ஆர்.எஸ்.எஸ்., குறித்த உண்மைத் தகவல்களைப் பகிர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஊதிய ஒப்பந்தம் இல்லை:

டில்லி ஆர்.எஸ்.எஸ்., தலைமைக்கும், தமக்கும் இடையே நேரடி ஊதிய ஒப்பந்தமோ அல்லது எழுத்துப்பூர்வ ஏஜென்சி ஒப்பந்தமோ இல்லை என்றும்; அதேநேரம் ஆர்.எஸ்.எஸ்., மீதான நன்மதிப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அடிப்படையிலேயே தாமாக முன்வந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைப்பு கூறியுள்ளது.

​இந்தியாவை மையமாகக் கொண்ட தன்னார்வ, சமூக-கலாசார அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்., இதில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர்கள் குழுவில் ராஜேந்திர சோனாரிகர், ஜெயந்த் பந்த், தேவானந்த கத்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

​அமெரிக்க மண்ணில் இந்திய கலாசாரம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகள் குறித்த தவறான சித்தரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ அமைப்பு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link