தன் நிறுவன பங்குகளில் முறைகேடான வர்த்தகம் நடைபெறுவதாக குற்றம்சாட்டி, ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ நிறுவனம், சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் புகார் அளித்துள்ளது. மேலும், விசாரணை முடியும் வரை, ‘எப் அண்டு ஓ’ பிரிவில் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்த நடவடிக்கை, நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 416 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிகர லாபத்தை நிறுவனம் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த 219 கோடி ரூபாயை ஒப்பிடும்போது, 90 சதவீதத்துக்கும் அதிகமான உயர்வாகும்.
இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில், நேற்றைய பங்கு வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை கிட்டத்தட்ட 15 சதவீதம் உயர்ந்து, வர்த்தக முடிவில் 437.75 ரூபாயானது.
மேலும், 2024 நவம்பர் 29ம் தேதி ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ பங்கு எப் அண்டு ஓ பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும், அதன் பின்னர் டிசம்பர் மாத இறுதியிலிருந்து பியூச்சர்ஸ் விலை, ஸ்பாட் விலையை விட குறைவாக வர்த்தகமானது சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி 7ம் தேதி காலை நேரத்தில், புரமோட்டர்கள் கைது, நிதி மேலாளர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது போன்ற வதந்திகள் சந்தையில் பரப்பப்பட்டதாக கூறி, அவற்றை நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. இந்த வதந்திகள் திட்டமிட்டு வெளியிடப்பட்டு, பங்கு விலையை வீழ்த்த முயற்சி நடந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், 2024 டிசம்பர் மாத இறுதியிலிருந்து ‘ஷார்ட் பொசிஷன்’ உருவாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
இதன் விளைவாக, 2025 ஜனவரி 6ம் தேதி 745 ரூபாயாக இருந்த பங்கு விலை, ஜனவரி 30ம் தேதி 440.65 ரூபாயாக சரிந்ததாகவும், இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 76,795 கோடியிலிருந்து 45,450 கோடி ரூபாயாக குறைந்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
