முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு.. காலையிலேயே திமுகவுக்கு ஷாக் தந்த லஞ்ச ஒழிப்புத்துறை!

திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர். திருச்சி தில்லை நகர் 5 ஆவது குறுக்கு தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு வீட்டிலும், சென்னையில் உள்ள அவரது சகோதரர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் அவரது வீடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இல்லம் மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 3 கார்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடந்த சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டன என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலையிலேயே மீண்டும் அதிரடி சோதனையில் இறங்கி உள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.

நக​ராட்சி நிர்வாகத்துறை அதி​காரி​கள் நியமனத்​தில் முறைகேடு நடை​பெற்றதாக முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு​வுக்கு எதிரான வழக்கில் மறுஆய்வு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலை​யில், தங்​களது தரப்பு வாதங்களை கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க கோரி கேவியட் மனுவை உச்ச நீதி​மன்​றத்​தில் அரசு தாக்​கல் செய்​துள்ளது.