தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனாவின் குடும்பத்தினர் அரசு ஒப்பந்தங்களுக்காக ஒப்பந்ததாரர்களிடமிருந்து கமிஷன் பெற்று வருவதாக வார இதழ் ஒன்றில் செய்தி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பக்கங்களுக்கு விரிவான மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் கீர்த்தனா, தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்ததோடு, இத்தகைய ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“கடந்த சில வாரங்களாக எனது அரசியல் மற்றும் தனிப்பட்ட நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், சமூக வலைத்தளங்களில் முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் எனக்கு ரூ. 4 கோடி மதிப்பில் பங்களா வீடு இருப்பதாகத் தகவல்களைப் பரப்பினார்கள். சில நாட்களிலேயே அந்தப் பொய், ரூ. 10 கோடி வீடு என உருமாறியது. தொடர்ந்து, திருமலை திருப்பதி கோயிலுக்கு நான் சென்றபோது அணிந்திருந்த சாதாரண ‘ஃபேஷன் நெக்லஸ்’ நகையை, தங்கக் காசு மாலை எனத் திரித்துக் கூறி வதந்தியைப் பரப்பினார்கள்.
தற்போது பாலம் கட்டும் திட்டம் ஒன்றில் ஒப்பந்ததாரரிடமிருந்து நான் ரூ. 3 கோடி கமிஷன் பெற்றதாகப் புதிய அவதூறைக் கிளப்பியுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரே இத்தகைய குற்றச்சாட்டை ஏற்கனவே முற்றிலுமாக மறுத்துள்ளார்.
வாரந்தோறும் கதைகளும், சொல்லப்படும் தொகைகளின் எண்களும் மாறிக்கொண்டே இருக்கின்றனவே தவிர, என் மீதான குற்றச்சாட்டுக்குச் சிறிய அளவிலான உண்மைச் சான்றோ அல்லது ஆதாரமோ இதுவரை முன்வைக்கப்படவில்லை.
தெளிவாகவும் அழுத்தமாகவும் கூறுகிறேன்:
நான் எனது வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட லஞ்சப் பணத்தைத் தொட்டது கிடையாது.
யாாரிடமும் லஞ்சத்தைக் கோரியதும் இல்லை, பெற்றதும் இல்லை.
எந்தவிதமான நிதி முறைகேட்டிலும் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.
மக்களாட்சி அமைப்பில், ஒரு மக்கள் பிரதிநிதியாக எனது செயல்பாடுகள், முடிவுகள் மற்றும் அமைச்சரவைப் பணிகள் மீதான விமர்சனங்களை நான் எப்போதும் வரவேற்கிறேன். விமர்சனங்கள் ஜனநாயகத்தின் முக்கிய அங்கம். ஆனால், ஜனநாயக ரீதியிலான விமர்சனத்துக்கும், தனிப்பட்ட நற்பெயரைச் சிதைக்கும் நோக்கில் ஜோடிக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
என் மீது குற்றச்சாட்டுகளை வைப்போரிடம் உண்மையான ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால், அவர்கள் தாராளமாகச் சட்டப்பூர்வ அதிகாரிகளிடம் அணுகலாம்; எந்தவொரு நேர்மையான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க நான் தயாராக இருக்கிறேன்.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பொய்யான புனைவுகளை உருவாக்கி ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க யாருக்கும் உரிமை இல்லை. தொடர்ந்து ஆதாரமின்றி என் மீது ஊழல் புகார்களையும் வதந்திகளையும் பரப்புபவர்கள் மீது தகுந்த மற்றும் கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.”
இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல் எதிர்ப்பை முதன்மை முழக்கமாக முன்வைத்திருந்தார். மே 10-ஆம் தேதி பதவிப் பிரமாணம் ஏற்ற பிறகு பேசிய அவர், அரசுப் பணத்தைத் தொடமாட்டேன் என்றும், அமைச்சரவையில் யார் ஊழலில் ஈடுபட்டாலும் அவர்கள் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்திருந்தார். இந்தச் சூழலில், அமைச்சர் கீர்த்தனா மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவரே விளக்கம் அளித்துச் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
