கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது. இந்த சூழலில், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லம் மற்றும் அவருடைய அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (29-10-26) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ரெய்டு விவகாரம் குறித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் – ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் – முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது. சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்” என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
