அன்பில் மகேஷ் வழக்கில் திடீர் ட்விஸ்ட்; தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ சரண்!

கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளி அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழை பெறவும் தனியார் பள்ளிகளிடம் சுமார் லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து, தனியார் பள்ளி சங்கத் தலைவராக இருந்த பி.டி அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார், சுரேஷ், ராஜா ஆகியோர் மீது ஏற்கெனவே மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி அளவில் பண மோசடி செய்ததாகவும், இதில் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயரும் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் மீது  சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு அவரது இல்லத்தில் சோதனை நடத்தினர். இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பி.டி.அரசகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ஏ1-ஆக குற்றம் சாட்டப்பட்ட நபரான பி.டி.அரசகுமாரை கைது செய்து அவர் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஏ2-ஆக குற்றம்சாட்டப்பட்ட நபர் முத்துக்குமார், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து, கடந்த 26ஆம் தேதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அமைந்தகரையில் கைது செய்து, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அன்பில் மகேஷை வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் அவரை சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முத்துக்குமார், இன்று (29-10-26) சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். முன்னதாக தனக்கு முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முத்துக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேற்று அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த சூழலில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த நிலையில், முத்துக்குமார் தாமாக முன்வந்து இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.