ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட்; புழல் சிறையில் அன்பில் மகேஷை சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின்!

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் கடந்த 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பாக அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார், இன்று (29-10-26) சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். முன்னதாக தனக்கு முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முத்துக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேற்று அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த சூழலில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த நிலையில், முத்துக்குமார் தாமாக முன்வந்து இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 2வது முறையாக புழல் சிறையில் இருக்கும் அன்பில் மகேஷை சந்தித்துப் பேசினார். முன்னதாக அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவும், அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையின் மனுவும் வரும் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேஷை சந்தித்துப் பேசினார்.