‘ஆலங்குளம் ஆழமான குளமாக மாறும்…’ நடிகர் ராமராஜன் பிரச்சாரம்

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் வர இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தும், மற்ற கட்சிகளை விமர்சித்தும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆலங்குளம் பகுதியில் கண்டப்பட்டி, புதுப்பட்டி, மருதம்புத்தூர், காசிநாதபுரம் உள்ள பகுதிகளில் வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ராமராஜன், காசிநாதபுரம் பகுதியில் பேசுகையில், ”ஏப்ரல் 23 தம்பி விவின் சக்கரவர்த்திக்கு வாக்கு பெட்டியில் ஏழாவது எண் கொடுத்துள்ளார்கள். முன்பெல்லாம் பேப்பர் கொடுப்பார்கள் அதில் சீல் வைத்துவிட்டு மடக்கி பெட்டிக்குள் போடுவோம். 

இப்பொழுது அப்படி இல்லை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்த வேண்டும். அதில் ஏழாவது எண் கொண்ட விசில் சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்த பட்டனை நீங்கள் அமுக்கினீர்கள் என்றால் ஆலங்குளம் தொகுதி அருமையான தொகுதி என்று பெயர் வாங்கும். தமிழ்நாட்டிலேயே முதன்மையான தொகுதியாக ஆலங்குளம் தொகுதி ஆக்குவோம் என்று சொல்கிறார்கள். ஆலங்குளம் சிறிது களங்களாக இருக்கும் அல்லவா அந்த களங்களை நீக்கி தெளிவான ஆழமான குளமாக மாற்றக்கூடிய வல்லமை படைத்தவர் விபின் சக்கரவர்த்தி” என்று பேசினார்.

Source link