உகாண்டாவின் கிபாலே தேசியப் பூங்காவில் வாழும் ‘நகோகோ’ (Ngogo) எனப்படும் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி குழுவில் தற்போது ஒரு பயங்கரமான “உள்நாட்டுப் போர்” நடைபெற்று வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு எனவும், சராசரியாக ஒவ்வொரு 500 ஆண்டுகளுக்கும் ஒருமுறை சிம்பன்சி சமூகங்கள் பிளவுப்படுகின்றன என்றும் விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
கிபாலே தேசியப் பூங்காவில் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட, மூன்று தசாப்த காலத் தரவுகளின் அடிப்படையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 200 சிம்பன்சிகள் ஒரே சமூகமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.
ஆனால், தற்போது அவை ‘மத்திய குழு’ மற்றும் ‘மேற்கு குழு’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ளன. இரண்டும் குழுக்களும் இணைந்து இனப்பெருக்கம் எல்லாம் செய்தநிலையில், 2015 முதல் புவியியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிரியத் தொடங்கியுள்ளன.
2017-ஆம் ஆண்டளவில், இரு குழுக்களும் முற்றிலும் தனித்தனியாக பிரிந்து தங்களுக்கென தனிப் பிரதேசங்களையும் உருவாக்கி, வெளியாட்கள் உள்ளே வராமல் ரோந்து பணிகளில் எல்லாம் ஈடுபட்டு வந்துள்ளன. இச்சூழலில் 2018-ல் கொடிய வன்முறை வெடித்தது.
2018 மற்றும் 2024-க்கு இடையில், மத்தியக் குழுவைச் சேர்ந்த ஏழு ஆண் சிம்பன்சிகளையும், 17 குட்டிகளையும் மேற்குப் பகுதியைச் சேர்ந்த வயதான சிம்பன்சிகள் கொன்றதை ஆராய்ச்சியாளர்கள் நேரில் கண்டதாக ஆய்வறிக்கைகள் சிலவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைப்பட்ட 8 ஆண்டுகாலக்கட்டத்தில், மத்தியக் குழுவைச் சேர்ந்த மேலும் 14 இளம் அல்லது வளர்ந்த ஆண் குரங்குகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
காணாமல்போன இவற்றிற்கு எந்த நோய் அறிகுறிகளும் இல்லை என்றும், இவை மேற்கு குழுவின் தாக்குதலுக்கு பலியாகிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
2024-ல் இந்த ஆய்விற்கான தரவு பகுப்பாய்வு முடிந்த பிறகும், மத்தியக் குழுவின் ஆண் குரங்குகள் மீது குறைந்தது இரண்டு தாக்குதல்கள் நடந்திருப்பதை சாண்டலின் குழு ஆவணப்படுத்தியுள்ளது.
சிம்பன்சிகளின் சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்கான போட்டி, தலைவர்களின் இறப்பு மற்றும் நோய் பாதிப்பு போன்றவற்றால் இந்த விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஒருமுறை குழுக்களாகப் பிரிந்த பிறகு, அவை ஒன்றுடன் ஒன்று பழகுவதைத் தவிர்த்து, எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கின என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக இதே போன்ற ஒரு பிளவு 1970-களில் தான்சானியாவிலுள்ள கோம்பே தேசிய பூங்காவில் நடைபெற்றதாக மறைந்த குரங்குயிரியல் ஆய்வாளர் ஜேன் குடால் கூறியுள்ளார்.
அப்போது சில சிம்பன்சிகள் பிரிந்து சென்று ஒரு புதிய குழுவை உருவாக்கியதை அடுத்து, பழையக் குழுவைச் சேர்ந்த சிம்பன்சிகள் அவற்றில் பலரைக் கொன்றுள்ளன.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆரோன் சாண்டல் தலைமையிலான குழு இது குறித்த ஆய்வுக் கட்டுரையை ‘சயின்ஸ்’ (Science) இதழில் வெளியிட்டுள்ளது.
