மதுரை: ”என்னிடம் கோடியில்லை; ஆனால் உயர்ந்த கொள்கை இருக்கு; என்னை நம்புங்கள், உங்களை நான் ஏமாற்ற மாட்டேன்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: 60 வருடம் அதர பழசு இரட்டை இலை, உதய சூரியன். அதையே கொண்டு வருவது, உழைக்கிற குடி உழவர் குடி. விவசாயி இல்லையென்றால் ஏது சோறு. நீ கார் இல்லாமல் வாழுவாய். நீ செல்போன், டிவி இல்லாமல் வாழுவாய், கொரோனா காலத்தில் எங்கே போனாய், டிவி வாங்கவா போனாய், நகை வாங்குவதற்காக போனாய்? மளிகை கடை திறந்து இருக்கிறதா, அரிசி, பருப்பு கடை திறந்து இருக்காய் என்று போனாய்? சோறு இல்லாமல் எப்படி வாழுவாய்? 24 மணி நேரமும் டிவியா பார்த்து கொண்டு இருப்பாய்?
என்னை நம்பு
ஆனால் 3 நேரம் சோறு சாப்பிட வேண்டும். சோறு யாரு தருவான்? விவசாயி தான் தர வேண்டும். அந்த விவசாயி சின்னத்தை தேடி, எல்லோரும் ஓட்டு போட வேண்டும். உன் மகன் கிட்ட கோடி இல்ல; உயர்ந்த கொள்கை இருக்கு,காசு இல்லை; நல்ல கருத்து இருக்கிறது.
என் மக்களை இந்த பூமியில் நல்லப்படியாக வாழ வைத்து விட வேண்டும். என் பிள்ளைகளை நல்லா படிக்க வைத்து விட வேண்டும். மக்களுக்கு சிறந்த மருத்துவத்தை கொடுக்க வேண்டும். நல்ல குடிக்க நீர் கொடுத்து, நஞ்சு, விஷமில்லாத உணவு கொடுத்து, நாட்டு மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்று கனவு இருக்கிறது. என்னை நம்பு, உன் மகன் ஏமாற்ற மாட்டேன்.
வக்கற்ற அரசு
2 திராவிட கட்சிகளும் என்ன செய்தன? இன்னும் எத்தனை காலத்துக்குதான் உதயசூரியனையும், இரட்டை இலையையும் கட்டி அழப் போகிறீர்கள்? ரூ.1000, ரூ.2000, ரூ.8000 கூப்பன் தருகிறேன் என்பது ஏமாற்று வேலை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை நாமே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும்.
குடிக்கு நீரை கொடுக்க முடியாத வக்கற்ற அரசு; தவித்த வாய்க்கு தண்ணீரை விற்கும் திறனற்ற அரசு. மலையையும், மண்ணையும் திருடுபவர்களுக்கா ஓட்டு செலுத்த உள்ளீர்கள். பணம் இருப்பவன் தான் அரசியல் செய்ய முடியும் என்பதை மாற்ற வந்த நாதக பிள்ளைகளுக்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.
