அன்பில் மகேஷ் மீது சொத்து குவிப்பு வழக்கு: தமிழக அரசின் அடுத்த மூவ்? சிக்கினால் 4 ஆண்டுகள் சிறை – anbil mahesh faces disproportionate assets case tamil nadu governments next move

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி வசூலித்த ஊழல் புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரைச் சிறையில் அடைத்திருக்கின்றனர். அவர் நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்பு வழக்குக்கான நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தச் சூழலில், அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்தது. இந்த வழக்கை நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருக்கிறது. தற்போது தமிழக அரசு, அன்பில் மகேஷ் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யத் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கு என்றால் என்ன?

மக்கள் பிரதிநிதியோ, அரசு ஊழியரோ தங்களது வருமானத்துடன் ஒப்பிடும்போது கணக்கில் காட்ட முடியாத அளவுக்கு அதிகமான சொத்துகளைச் சேர்த்து இருப்பதே சொத்துக் குவிப்பு வழக்கு ஆகும்.

அதிக சொத்து வைத்திருந்தால் மட்டும் ஒரு நபர்சொத்துக் குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்படத் தகுதியுடையவர் என்று இல்லை. அந்தச் சொத்துகள் எவ்வாறு பெறப்பட்டன, அந்த வருமானத்திற்கான மூலம் மற்றும் ஆதாரம் என்ன, அவை சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட சொத்துகளா என்பதுதான் இந்த வழக்கின் முக்கிய அம்சமாகும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஊழல் தடுப்புச் சட்டம் , 1988-ன் அடிப்படையில் குறைந்தபட்சமாக நான்கு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம்.

ஜெயலலிதா முதல் பொன்முடி வரை

தமிழக அரசியலில் அதிகம் பேசப்படும் வார்த்தைகளில் ஒன்று சொத்துக் குவிப்பு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் தமிழகத்தின் பல அமைச்சர்கள் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

ஜெயலலிதா வழக்கு

அந்த வகையில், 1991 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், 2014இல் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. அந்த வழக்கில் அவர் இறக்கும் வரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் இருந்தது.

வி.கே. சசிகலா

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, ஜெயலலிதாவுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், 2017ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். சசிகலா நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

பொன்முடி வழக்கு

அதேபோல, திமுகவின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் 2023ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், 2024 மார்ச்சில் உச்ச நீதிமன்றம் அந்தக் குற்றத்தீர்ப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

பல முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள்

தமிழக அரசியலில் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு எனப் பல முன்னாள் அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இந்தச் சூழலில், அன்பில் மகேஷ் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யத் தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Source link