திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த அக்கிராம மக்கள், அங்கு மதுபானக்கடை அமைப்பதற்குத் தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துவாக்குடியில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்குச் செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகச் சென்று கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர்.
அந்த மனுவில், செங்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுபானக்கடை அமையவிருக்கும் சாலையைக் கடந்துதான் பள்ளிச் சிறுவர்களும் சிறுமிகளும் தங்கள் பள்ளிக்கூடங்களுக்கும், பெண்கள் தங்களுடைய வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். எனவே, இப்பகுதியில் மதுபானக்கடை அமைக்கப்படும் பட்சத்தில் பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட செங்குறிச்சி கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
ஆதலால், கிராம மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செங்குறிச்சி கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்கும் முடிவைக் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மக்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
