தூத்துக்குடியில் ரூ.33,000 கோடியில் மெகா கப்பல் கட்டும் தளம்: மோடிக்கு நயினார் நாகேந்திரன் நெஞ்சார்ந்த நன்றி

தூத்துக்குடியில் சுமார் ரூ.33,000 கோடி (4 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பீட்டில் பிரம்மாண்ட மெகா கப்பல் கட்டும் தளம் (Mega Shipyard) அமைப்பதற்கான ஒப்பந்தம் தென் கொரியாவின் எச்.டி ஹூண்டாய் நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ளது. தென் தமிழகத்தை சர்வதேச கடல்சார் வர்த்தக வரைபடத்தில் உயர்த்தப்போகும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு வித்திட்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் ஆகியோருக்குத் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென் கொரியாவின் சியோல் நகரில், உலகப் புகழ்பெற்ற எச்.டி ஹூண்டாய் (HD Hyundai) நிறுவனத் தலைவர் சுங் கி-சுன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, தூத்துக்குடியில் அமையவுள்ள 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.33,000 கோடிக்கும் அதிகமான) மதிப்பிலான பிரம்மாண்ட ‘மெகா கப்பல் கட்டும் தள’ (Mega Shipyard) திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவரும் வகையில், மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

தென் கொரியாவின் அதிநவீன உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தோடு அமையவுள்ள இத்திட்டம், தூத்துக்குடியை சர்வதேச கடல்சார் வர்த்தக வரைபடத்தில் முதன்மை இடத்திற்கு உயர்த்தப் போகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்புகளைத் தேடிப் பெருநகரங்களுக்கு இடம்பெயரும் தென் தமிழகத்து இளைஞர்களுக்கு, தங்களின் சொந்த மண்ணிலேயே பல்லாயிரக்கணக்கான உயர்தர வேலைவாய்ப்புகளையும் பொருளாதார முன்னேற்றத்தையும் இத்திட்டம் உறுதி செய்யும்.

தென் தமிழகத்தை இந்தியாவின் முன்னணி தொழிற்புரட்சி மையமாக மாற்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை நனவாக்கிய நமது அன்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவாலுக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் தமிழக பா.ஜ.க சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.” என்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Source link