முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (29-10-26) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “விஜய் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு சுமார் 6 மாத காலம் ஆகின்றன. இந்த காலத்தில் நிர்வாகத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. ஒரு நிலையற்ற ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதை இந்த அரசு சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதற்கு பல்வேறு காரணங்களைக் கூறி தட்டி கழிக்கிறார்களே தவிர இந்த மின்வெட்டைச் சரி செய்வதற்கு ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
2021இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2026 வரை திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.11.50 காசுக்கு கொள்முதல் செய்யப்பட்டது. பிறகு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20 வரை மின் கொள்முதல் செய்யப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2026ல் ஜோசப் விஜய் ஆட்சியில் அமர்ந்தார். வீரவசனம் பேசுகின்ற நிர்மல் குமார், மின்சாரத்துறை அமைச்சராக சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதிலிருந்துதான் இந்த குளறுபடி ஏற்பட்டது. அப்பொழுது சட்டமன்றத்தில், கடந்த கால ஆட்சியில் மின்கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளன என்றும் திட்டமிட்டு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டது என நிர்மல்குமார் ஒரு கருத்தை தெரிவித்து ரூ.20க்கு கொள்முதல் செய்த அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அதற்கு மாற்றுவழி கண்டுபிடித்து மீண்டும் மின் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் பிரச்சனை வந்திருக்காது.
ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேண்டுமென்றே திட்டமிட்டு மின் பற்றாக்குறை இருப்பது போல் 5 மாத காலமாக உருவாக்கினார்கள். ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சரியான முறையில் மின் கொள்முதல் செய்யாமல் மின் பற்றாக்குறை இருப்பதைப் போல் உருவாக்கி செயற்கையாக மின் தட்டுப்பாட்டை உருவாக்கி இப்போது யூனிட்டுக்கு ரூ.37.50காசுக்கு மின் கொள்முதல் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அப்போது எங்கே ஊழல் நடந்திருக்கிறது? இவர்களுடைய ஆட்சியில் தான் ஊழல் நடந்திருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய அரசாங்கம் தமிழக வெற்றிக் கழக அரசாங்கம். இதற்கெல்லாம் எதிர்காலத்தில் இந்த துறையைச் சேர்ந்த அமைச்சரும் இன்றைய முதலமைச்சரும் பதில் சொல்லி ஆக வேண்டும். மக்களுடைய பணம் வீணாக்கப்படுவதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. குற்றம் செய்த குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை, நீதிமன்றத்தின் மூலமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளையும் பாதுகாக்க முடியவில்லை. முதல்வர் ஆன உடனே மூன்று மாதம் கழித்து முதல்வர் விஜய் புழல் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த வந்து போன 20 நாட்களிலேயே புழல் சிறையில் இருந்து இரண்டு பேர் தப்பித்து ஓடிவிட்டார்கள். இவர் என்ன ஆய்வு செய்தார்? அவர் ஆய்வு செய்தாரா? அல்லது ஜோசியர் சொன்னபடி அங்கே சென்று வந்தாரா? திறமையற்ற அரசாங்கம் இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குழந்தைகள் அடிக்கடி மாயமாகிறார்கள்., சிறுமிகள் அடிக்கடி மாயமாகிறார்கள். இதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை” என ஆவேசமாகப் பேசினார்.
