சென்னை மெரினாவில் ரோப் கார் அமைக்கும் பணிக்காக தனியார் நிறுவனத்திடம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று(அக்.29) தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் சமீரனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் விஜய் ஆய்வுக்கு வரும் போது மேயர், துணை மேயருக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றும், தகவல் தெரிவிக்காமலே ஊடகங்களில் மேயர் துணை மேயர் புறக்கணிப்பு என செய்தி வெளியாகிறது என்று கண்டனம் தெரிவித்தார்.
சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் அமைப்பது குறித்து மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று(அக்.29) நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மன்ற உறுப்பினர் செம்மொழி கேள்வி எழுப்பினார். அப்போது, மெரினாவில் ரோப் கார் அமைக்க 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிலையில், பணிகள் எந்த அளவில் உள்ளது என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, மெரினாவில் ரோப் கார் அமைக்கும் பணிக்காக ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்திடம் ஆய்வு செய்ய கோரியபோது, அவர்கள் ரோப்கார் அமைக்க சாத்தியம் இல்லை என தெரிவித்தனர். இந்த நிலையில், மற்றொரு தனியார் நிறுவனத்திடம் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் பரிந்துரை செய்துள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியை கலைத்து விடுங்கள் – மேயர் பிரியா
முதலமைச்சர் விஜய் ஆய்வுக்கு வரும் போது மேயர், துணை மேயருக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆவேசமாக பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களை புறக்கணிப்பதற்கு பதிலாக சென்னை மாநகராட்சியை கலைத்து விடுங்கள் என மாநகராட்சி ஆணையர் சமீரனை சரமாரியாக சாடியுள்ளார்.
மண்டல குழு தலைவர்கள் , கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
மண்டல அளவிலும், வார்டு அளவிலும் மண்டல குழு தலைவர்களுக்கு, கவுன்சிலர்களுக்கு அழைப்பு இல்லை என்றும், சென்னை மாநகராட்சி மூலதன நிதி அந்த பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் பேசி பெற்ற பணிகள் திறப்பு விழாவிற்கு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலை படுத்தப்படுகிறார்கள் என்றும் கண்டித்தார். சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இனி நடைபெறும் சென்னை மாநகராட்சி தொடர்பான அரசு நிகழ்ச்சிக்கு கவுன்சிலர்களை அழைக்கவிட்டால் வார்டு பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார்.
மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம்
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வார்டு உறுப்பினர்களை நிச்சயம் அழைக்க வேண்டுமென நான் அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளேன். DIPR கொடுத்துள்ள விதிகள் படி கல்வெட்டு அமைக்கப்படுகிறது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.
Source link
