சமூக நீதி சர்வே நடத்த ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்: அமைச்சர்களுடன் விஜய் தனித்தனியாக ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29.10.2026) தலைமைச் செயலகத்தில், மூன்றாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ‘சமூக நீதி சர்வே’ நடத்துவதற்கும், அதற்கென பிரத்யேக ஆணையம் அமைப்பதற்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய சமூகநீதி சர்வேக்கு ஆணையம் அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சமூகநீதி சர்வே-விற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு குறித்தும் மற்றும் அனைத்து அமைச்சர்களிடமும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனி தனியாக கருத்துகளை கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சமூகத்தினரின் கல்வி நிலை, வேலைவாய்ப்பு விகிதம், பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றைத் தரவுகளாக (Data) திரட்டுவது. இந்த சர்வேயை நடத்துவது தொடர்பாக அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களிடமும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனித்தனியாகக் கருத்துகள் கேட்டடதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய், சமூக வலைத்தள கருத்துக்களை பார்த்து மனம் தளரக்கூடாது என்றும் அமைச்சர்கள் தைரியமாக பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த முடிவை வரவேற்று, கணக்கெடுப்பை விரைவாகத் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சமூகநீதி சர்வே நடத்த ஒப்புதல்: விரைவில் ஆணையம் அமைக்க முடிவு வரவேற்கத்தக்கது – கணக்கெடுப்பை விரைந்து தொடங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கும்,  அதற்கான ஆணையத்தை அமைப்பதற்கும்  அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன்  எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் 47 ஆண்டு கனவாகும். தேசிய அளவிலும், மாநில அளவிலும் இதை சாத்தியமாக்குவதற்காக மருத்துவர் அய்யா அவர்களும், அவரது வழிகாட்டுதலில் நானும் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம்.

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர், கடந்த மே 11 ஆம் தேதி எனது இல்லத்திற்கு வந்து என்னை சந்தித்த முதலமைச்சர் விஜய் அவர்களிடம், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே நடத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தினேன். 

அதன் தொடர்ச்சியாக ஜூன் 5 ஆம் தேதி சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி சர்வேயை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். தொடர்ந்து முதலமைச்சர் விஜய் அவர்களை ஜூன் 9 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகளை விளக்கியதுடன், சமூகநீதி சர்வே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், எங்களின் கொள்கையும் அது தான் என்று கூறி தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அதை நிறைவேற்றும் வகையில் ஆளுனர் உரையில்  சமூக நீதி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்ட  தமிழக அரசு, அடுத்தக்கட்டமாக ஆணையம் அமைக்க ஒப்புதல் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வேயை நோக்கிய அரசின் பயணம் சரியான பாதையில் செல்கிறது என்பதை இன்றைய அமைச்சரவைக் கூட்ட முடிவு உணர்த்துகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையத்திற்கு சமூகநீதியில் அக்கறை கொண்ட  ஓய்வு பெற்ற  உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்கவும்,  அடிப்படை ஆயத்த பணிகளை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக முடித்து  சமூகநீதி சர்வேயை  அரசு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Source link