முதலமைச்சர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், வெளியில் முதலமைச்சரின் கூட்டத்தை புறக்கணிப்பதாக செய்திகள் வருகிறது என மாமன்றக் கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. குறிப்பாக அரசு நிகழ்ச்சிகளுக்கு கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அப்போது பேசிய துணை மேயர் மகேஸ் குமார், “சைதாப்பேட்டை தொகுதியில் ஒரு பூங்கா புனரமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்திருக்கிறது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார். மண்டலக் குழு தலைவருக்கும் வார்டு கவுன்சிலருக்கும் தகவல் சொல்லவே இல்லை. அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
உடனே கவுன்சிலர்கள் பலரும் எழுந்து எங்கள் வார்டுகளிலும் இதே நிலைமைதான். அரசு நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பதே இல்லை. முன்பெல்லாம் அரசு நிகழ்ச்சி என்றால் மக்கள் தொடர்பு அலுவலர் அழைத்து தகவல் சொல்வார், ஆனால், தற்போது எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை. மாநகராட்சி ஆணையர் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய மேயர் பிரியா, “மாமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆனால், ஒவ்வொரு மாதமும் இதே குற்றச்சாட்டு எழுகிறது. கவுன்சிலர்கள் மக்களின் குறைகளை கேட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு ஒரு வேலையை செய்தால் அதை எம்.எல்.ஏக்கள் வந்து திறந்து வைப்பதா? ஒரு திட்டத்தை செயல்படுத்த ஓராண்டுக்கு மேல் ஆகும், அதுவரை அந்த திட்டத்தை மாமன்ற உறுப்பினர்கள் கண்காணித்து பணிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அவர்களை அழைக்காமலேயே எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைக்கிறார்கள். எம்.எல்.ஏ.,க்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். நாங்களும் மக்கள் பிரதிநிதிகள்தான்.
மாமன்ற உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்களுக்கு மட்டும் இல்லை. எனக்கே அந்த நிலைமைதான். முதலமைச்சர் ரிப்பன் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், வெளியில் முதலமைச்சரின் கூட்டத்தை புறக்கணிப்பதாக செய்திகள் வருகிறது. முதலமைச்சர் வருகிறார் என்றால் எத்தனை மணிக்கு வருகிறார் என சொல்ல வேண்டாமா? நான் என்ன காலையில் இருந்து இரவு வரை ரிப்பன் பில்டிங்லயேவா இருக்க முடியும். முதலமைச்சர் வர போறார் என்றால் முன்னாடியே சொல்ல வேண்டும்.
மழைக்கான ஆய்வுக் கூட்டத்திற்கு கூட கவுன்சிலர்களுக்கு அழைப்பு இல்லை, அதிகாரி கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்க சொல்லி அதிகாரிகளுக்கு எதுவும் அறிவிப்பு வந்திருக்கா? அதிகாரிகள் அரசியல் சார்பின்றி செயல்பட வேண்டும். மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க விருப்பமில்லை எனில் மாநகராட்சியை கலைத்து விடுங்கள். அதிகாரிகளே கூட்டத்தை நடத்தட்டும்.” இவ்வாறு மேயர் பிரியா பேசினார்.
அடுத்ததாக பேசிய துணை மேயர் மகேஸ் குமார், “பிரதமரின் நிகழ்ச்சிக்கு மேயருக்கு அழைப்பு வந்தது. அங்கே அவர் சென்றார். அதேபோல் முதல்வரின் நிகழ்ச்சிக்கும் அழைத்தால் மரபுப்படி மேயர் வருவார்” என்று கூறினார். சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் இவ்வாறு வாக்குவாதங்கள் நடந்ததால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
