ஐ.பி.எல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான அவரை டிரேட் முறையில் பெறுவதற்கு பல ஐ.பி.எல் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், அவரை எந்த அணி எடுக்கும் என்பது குறித்து கணித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஆர். அஸ்வின்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
எந்த அணி செல்ல வாய்ப்பு?
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் எதிர்பார்த்தபடி அமையவில்லை. கேப்டன் என்ற முறையில் அவரால் அணியிலிருந்து சிறந்த பலனைப் பெற முடியவில்லை; அதேபோல், தனிப்பட்ட ஆட்டத்திலும் அவரால் தொடர்ந்து ரன்களைக் குவிக்கவோ அல்லது விக்கெட்டுகளை வீழ்த்தவோ முடியவில்லை. இறுதியில், அணியின் உள்ளே அதிருப்தி நிலவுவதாகப் பேச்சுகள் எழுந்தன. இதனால், ஹர்திக்கை அணியிலிருந்து விடுவிக்கும் கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின், ஹர்திக் எந்தெந்த அணிகளில் சேர வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்குச் செல்வது அவருக்குச் சாதகமாக இருக்கலாம், ஏனெனில் அங்கு அவருக்கு கேப்டனாகும் வாய்ப்பும் கிடைக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அஸ்வின் தனது யூடியூப் சேனலில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்குச் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அங்கு ஹர்திக் கேப்டனாகவும் மாற முடியும். அவருக்குப் பதிலாக அவர்கள் வருண் சக்கரவர்த்தியை வழங்கலாம். ஆனால், அபிஷேக் நாயர் அங்கு இருக்கும் வரை, வருண் அந்த அணியிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஹர்ஷித் ராணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பிற விருப்பங்களாக இருக்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியைப் பொறுத்தவரை, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாம் கரன், அல்லது பிரிஜேஷ் சர்மா அல்லது துஷார் தேஷ்பாண்டே ஆகியோரை டிரேடு செய்யலாம். அல்லது ஜெய்ஸ்வாலுடன் யாஷ் ராஜ் புஞ்சா அல்லது பிஷ்னோய் போன்ற வீரர்களும் இடம்பெறலாம்” என்று அவர் தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி குறித்துப் பேசிய அவர், அந்த அணிக்கு ஒரு இந்திய விக்கெட் கீப்பரும், தரமான பந்துவீச்சாளர்களும் தேவை என்பதை வலியுறுத்தினார். “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு இந்திய விக்கெட் கீப்பர் மிகவும் அவசியம். கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமாகச் செயல்பட்டு வரும் தங்கள் பந்துவீச்சுத் துறையையும் அவர்கள் பலப்படுத்த வேண்டியிருக்கும். பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியில் உள்ள ஒமர்சாய் போன்ற வீரர் மும்பை இந்தியன்ஸுக்கு ஆர்வமூட்டலாம். குஜராத் டைட்டன்ஸ் (GT) பற்றி யாரும் பேசவில்லை, ஆனால் அவர்கள் ரஷித் கானை ஹர்திக்கிற்குப் பதிலாக வழங்கி இந்த மாற்றத்தில் இணையலாம்” என்று அஸ்வின் கூறினார்.
மேற்கூறிய அணிகளைத் தவிர, ஹர்திக் பாண்டியாவுக்காக இன்னும் சில அணிகளும் போட்டியில் உள்ளன என்பதையும் குறிப்பிட்ட அஸ்வின், “ஹர்திக் பாண்டியாவுக்காக ஆறு அணிகள் போட்டியிடுவதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) இந்த போட்டியில் இல்லை என்பதால், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.
முக்கியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR), ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ஆகிய அணிகளே இதில் உள்ளன. மேலும், ஹர்திக் பாண்டியா தனது அடுத்த அணியில் கேப்டன் பதவியைக் கட்டாயம் எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் (MI) அணியிலிருந்து வெளியேற விரும்பும் அவர், தனக்கு மிகவும் பொருத்தமான ஒரு அணியைத் தேர்ந்தெடுக்கவே விரும்புவார்,” என்று அஸ்வின் கூறினார்.
