புதுடில்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற அனைத்து கட்சியினரும் இணைந்து குரல் கொடுங்கள் என அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: அனைத்து அரசியல் கட்சிகளும் நீண்ட காலமாக அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி வருவதால், அந்த விருப்பத்தை நனவாக்குவதற்கு இதுவே சரியான தருணம்; எனவே, இந்த வாய்ப்பை நாம் நழுவ விடக்கூடாது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற அனைத்து கட்சியினரும் இணைந்து குரல் கொடுங்கள். ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்புதான் இந்த சிறப்பு கூட்டத்தொடர்.
விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, மகளிர் இட ஒதுக்கீட்டை அதன் உண்மையான நோக்கத்துடன் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களும், சட்டசபை தேர்தல்களும் மகளிர் இட ஒதுக்கீட்டை உள்ளடக்கி நடத்தப்படுவது கட்டாயமாகும். இது இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களுக்குப் புத்துயிர் அளித்து, மக்கள் நம்பிக்கையை வலுப்படுத்தும். மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது அமல்படுத்துவது ஒரு மாபெரும் சாதனையாக அமையும்.
பார்லிமென்டில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்துவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பெண்களுக்கு முன்னேறுவதற்கும், முடிவெடுப்பதற்கும், மிக முக்கியமாக, தலைமை தாங்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்போதுதான் எந்தவொரு சமூகமும் முன்னேறும். இந்தியா ஒரு வளர்ந்த நாடாக உருவெடுக்கும் தனது கனவை நனவாக்க, இந்தப் பயணத்தில் பெண்கள் பங்கு மிகவும் முக்கியம். பொது வாழ்வின் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை நாம் அனைவரும் காண்கிறோம்.
விண்வெளி முதல் விளையாட்டு வரை, ஆயுதப் படைகள் முதல் புத்தொழில் நிறுவனங்கள் வரை, இந்தியாவின் மகள்கள் ஒவ்வொரு துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தங்களின் கடின உழைப்பு மற்றும் உறுதியால், அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர்நமது மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள். அரசியல் களத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
