கதையின் ட்விஸ்ட் கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு! – படக்குழு வித்தியாச முயற்சி!

தெலுங்கில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக வலம் வருபவர் பூர்வாஜ். இப்போது புதிதாக ‘கில்லர்’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் இவரது மனைவி ஜோதி பூர்வாஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவரோடு பூர்வாஜும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க மணீஷ் கிலாடா, சந்திர காந்த் கொல்லு, விஷால் ராஜ் உள்ளிட்ட பலரும் துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆசீர்வாத் மற்றும் சுமன் ஜீவா     இசையமைத்துள்ளனர். 

இப்படம் சைன்ஸ் – ஃபிக்சன் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதற்கு முந்தைய நாளான அக்.29ஆம் தேதி ப்ரீமியர் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் படக்குழு செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர். அதில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது படத்தில் இரண்டாம் பாதியில் வரும் ஒரு முக்கியமான ட்விஸ்டை சரியாக கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் எப்படி கலந்து கொள்வது குறித்து இயக்குநர் பூர்வாஜ் விளக்கினார். 

அவர் பேசியதாவது, “அக்டோபர் 29ஆம் தேதி இரவு 10 மணிக்கு படத்தின் முதல் காட்சியைப் பார்க்க வேண்டும். இடைவேளைக்குப் பிறகு ஐந்து நிமிடங்களுக்குள், அவர்கள் ஒரே வரியில் படத்தின் ட்விஸ்டை கணித்து, திரையரங்கில் வாங்கிய டிக்கெட்டை புகைப்படம் எடுத்து 7330608675 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அணுப்ப வேண்டும். போட்டியின் விதிகளின் படி ஒரு வெற்றியாளரை நாங்கள் தேர்ந்தெடுப்போம்” என்றார்.