அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்க முயற்சி: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

புதுடில்லியில் நடந்த இந்திய தொழில்துறை தொடர்பான மாநாட்டில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: அமெரிக்கா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் வெளியானதும், நமது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் எந்த உணர்வுப்பூர்வமான நலனும் பாதிக்கப்படவில்லை என்பதை அறிந்து மக்கள் கொண்டாடுவார்கள். இதனை நம்பிக்கையுடன் அறிவிக்கிறேன். இந்தியா வலுவான நிலையில் இருக்கும்.

இந்தியா இதுவரை செய்த 8 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றில் கூட ஒரு சிறு குறையை கண்டுபிடிக்கும் நபரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. ஒன்பதாவது ஒப்பந்தமாக அமெரிக்கா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சிலர் அரசியலாக்க முயல்கின்றனர். அவர்கள் கருத்து சொல்ல தகுதியானவர்களா என எனக்கு தெரியவில்லை. அது ஒருவேலை புரிதல் இல்லாமை அல்லது அறிவு இல்லாமையின் காரணமாக இருக்கலாம். ஒப்பந்தம் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. அவர்கள் எதை விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

Source link