`10 வயதில் தொடங்கிய பயணம்' – 92 வயதில் பாடகி ஆஷா போஸ்லே மரணம்; விடைபெற்ற 80 ஆண்டுகால இசை சரித்திரம்

பாலிவுட் உட்பட 20 மொழிப்படங்களில் பாடியுள்ள பாடகி ஆஷா போஸ்லே நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலன்றி காலமானார். அவருக்கு வயது 92. மறைந்த பாடகி லதா மங்கேங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே 20 மொழிகளில் பாடியிருக்கிறார். அவரின் மரணம் இசைத்துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

10 வயதில் தொடங்கிய பயணம்

ஆஷா போஸ்லே தனது இசைப்பயணத்தை தனது 10 வயதில் தொடங்கினார். 1943ம் ஆண்டு மராத்தி திரைப்படமான `மஜா பால்’ என்ற படத்தில் `சலா சலா நவ் பாலா…’ என்ற பாடல்தான் அவர் பாடிய முதல் பாடல்.

ஆஷா போஸ்லே

ஆரம்பத்தில் `ஓ ஹசீனா ஜுல்ஃபோன்வாலி’ போன்ற நடன பாடல்களைப் பாடி வந்த ஆஷா போஸ்லே நாளடைவில் `தில் சீஸ் கியா ஹை’ போன்ற கஜல்கள் மற்றும் `தோரா மான் தர்பன் கெஹ்லயே’ போன்ற கிளாசிக்கல் பாடல்களிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

ஆஷா போஸ்லே தனது 80 ஆண்டு கால இசை வாழ்க்கையில், ஷர்மிளா தாகூர், ஆஷா பரேக், ரேகா, ஊர்மிளா மடோன்கர், கரிஷ்மா கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷமிதா ஷெட்டி வரை பல நடிகைகளுக்காகப் பாடியுள்ளார். 2023 ஆம் ஆண்டில், போஸ்லே தனது 90வது பிறந்தநாளை, குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு பதிலாக துபாயில் நடந்த நேரடி இசை நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டு சென்றார்.

அதில் பேசிய ஆஷா போஸ்லே,”90 வயதில் மேடையில் மூன்று மணி நேரம் நின்று பாடுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது- மக்கள் சுவாசத்தை நிறுத்தும்போது இறக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, இசை என் சுவாசம். நான் அதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன்,” என்று பேசினார்.

ஆஷா போஸ்லே 1981 இல் `உம்ராவ் ஜான்’ படத்திற்காக தனது முதல் தேசிய விருதையும், 1988 இல் `இஜாசத்’ படத்திற்காக தனது இரண்டாவது விருதையும் வென்றார். 2000 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும், 2008 இல் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷனையும் பெற்றார்.

2022ம் ஆண்டு ஜாக்கி ஷெராஃப்பின் `லைஃப்ஸ் குட் ‘படத்தின் `ரூட் பீகே டான்’ என்ற பாடல்தான் தான் அவர் கடைசியாக பாடிய ஹிந்தி பாடல் ஆகும்.

16 வயதில் காதல்:
ஆஷா போஸ்லேவின் 80 ஆண்டு கால வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. போஸ்லே தனது 16 வயதில் தனது தனிப்பட்ட செயலாளரான கணபத்ராவ் போஸ்லேவை திருமணம் செய்தார். அவருக்கு அவருடன் மூன்று குழந்தைகள் இருந்தனர், ஆனால் கணவர் மற்றும் மாமியார் பல ஆண்டுகளாக கொடுமைப்படுத்தியதால் போஸ்லே 1960 இல் கணபத்ராவிடம் இருந்து பிரிந்தார்.

கர்ப்பமாக இருந்தபோது தன் கணவர் வீட்டை விட்டு வெளியில் வந்தார். இது குறித்து ஒரு முறை ஆஷா போஸ்லே கூறுகையில்,”எங்களது திருமணம் காதல் திருமணம். இதற்காக லதா அக்கா என்னிடம் நீண்ட நாட்களாக பேசவில்லை. அவர் எங்களை ஏற்கவில்லை. ஆனால் கணவன் வீட்டில் துன்புறுத்தல், கொடுமை காரணமாக என் இளைய மகன் ஆனந்த் வயிற்றில் இருந்தபோது என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர்.

நான் என் அம்மா, சகோதரிகள் மற்றும் சகோதரனிடம் திரும்பிச் சென்றேன். நான் யாரையும் குறை சொல்லவில்லை” என்று கூறினார்.

தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்த பிறகு, ஆஷா போஸ்லே பின்னர் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனை 1980 இல் திருமணம் செய்துகொண்டார். தன் குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஆஷா போஸ்லே இன்று காலமானார்.

Source link