கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: கார்த்திக் குடும்பத்துக்குக் கிடைத்த புது நம்பிக்கை… இதயத்தைக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸைக் குறிவைக்கும் சதி!
‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களால் கதை விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில், வரப்போகும் எபிசோடில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.
கார்த்திக்கிற்கு அருண் போன் செய்து, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் கிடைத்து விட்டதாகவும், அந்த நபரின் குடும்பத்தினரும் இதயத்தைத் தானமாகக் கொடுக்கச் சம்மதித்து விட்டதாகவும் சந்தோஷமான செய்தியைச் சொல்கிறார். இதைக் கேட்டு மகிழ்ச்சியடையும் கார்த்திக், உடனே மருத்துவரிடம் விஷயத்தைத் தெரிவிக்கிறார். இவ்வளவு சீக்கிரம் இதயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், கடவுளின் கருணையால் எல்லாமே நல்லபடியாக நடப்பதாகவும் சொல்லி மருத்துவர் நிம்மதி அடைகிறார்.
இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை சந்திரகலாவின் ஆளான ஒரு நர்ஸ் ஒட்டுக் கேட்டு விடுகிறார். உடனே சந்திரகலாவிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, அவர் அதிர்ச்சியடைவதுடன் ஆத்திரமும் அடைகிறார். எப்படியாவது அந்த இதயம் கார்த்திக் குடும்பத்துக்குப் போய்ச் சேரக்கூடாது என்று முடிவெடுக்கிறார். இதற்காகச் சிறையில் இருக்கும் சிவனாண்டியைத் தொடர்பு கொள்கிறார் சந்திரகலா. அவரும், தனக்கு நம்பிக்கையான மருதுவை வைத்து இந்த வேலையை முடிக்கச் சொல்லி திட்டம் போடுகிறார்.
இதையடுத்து, கோயம்புத்தூரில் இருக்கும் மருதுவிடம் பேசும் சந்திரகலா, சிவனாண்டிக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், அந்த இதயம் கார்த்திக் குடும்பத்துக்குப் போய்ச் சேரவே கூடாது என்றும் உத்தரவிடுகிறார். சிவனாண்டிக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மருதுவும் இந்தச் சதித் திட்டத்துக்கு சம்மதிக்கிறான். மறுபக்கம், அருணும் இளையராஜாவும் இதயத்தைத் தானமாகக் கொடுக்க முன்வந்த நபரின் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கு சோகத்தில் இருக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்ட இதயத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானத்தில் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால், நேரத்தை வீணாக்காமல் ஆம்புலன்ஸ் மூலமாகவே இதயத்தைக் கொண்டு செல்ல முடிவெடுக்கிறார்கள். இதயத்தை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேகமாகச் செல்ல, அதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று மருது திட்டம் போடுகிறான். இதற்காக ஒரு லாரியை ஏற்பாடு செய்து, ஆம்புலன்ஸைத் துரத்திச் செல்கிறான். ஒரு கட்டத்தில், ஆம்புலன்ஸின் மீது லாரியை மோதவிட்டு விபத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்கிறான்.
மருதுவின் இந்தச் சதியிலிருந்து ஆம்புலன்ஸ் தப்பித்து கார்த்திக்கிடம் பத்திரமாகப் போய்ச் சேருமா? சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்றும் முயற்சி வெற்றி பெறுமா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: போலீஸ் ஸ்டேஷனில் வர்மாவுக்கு சவால் விட்ட கபிலன்… அயலி செய்த காரியத்தால் வீட்டில் வெடித்த அதிர்ச்சி!
‘அயலி’ சீரியலில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், வரப்போகும் எபிசோடில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம். போலீஸ் ஸ்டேஷனில் ஐ.ஜி. விஜயகுமார் முன்னிலையில் பரபரப்பான விவாதம் நடக்கிறது. அப்போது வர்மாவை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கபிலன், இனியும் தன்னால் பொறுமையாக இருக்க முடியாது என்றும், அந்த வீடியோ காட்சிகளைக் கொடுத்துவிட்டு கிளம்பப் போவதாகவும் திட்டவட்டமாகச் சொல்கிறான்.
மேலும், “நான் நினைக்கிற இடத்தில்தான் ஆதாரங்கள் இருக்கு. நீ கேட்கிற இடத்துல இல்லை” என்று வர்மாவுக்கு நேரடியாகச் சவால் விடுகிறான். இதனால் கோபமடையும் வர்மா, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்குகிறான். மறுபக்கம், இந்திராணி கபிலனுக்குப் போன் செய்து அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்கிறாள். அதற்கு கபிலன், தான் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகச் சொல்லி சமாளிக்கிறான். ஆனால், அவன் பேசுவதைக் கேட்ட இந்திராணிக்குச் சந்தேகம் வருகிறது. இதனால் அடுத்தடுத்து பல கேள்விகளைக் கேட்டு அவனைத் துளைத்தெடுக்கிறாள்.
கபிலனும் ஒவ்வொரு கேள்விக்கும் பொய்யான பதிலைச் சொல்லி சமாளிக்கப் பார்க்கிறான். ஆனால், அவன் சொல்வதில் இருக்கும் முரண்பாடுகளைக் கவனிக்கும் இந்திராணிக்கு, கபிலன் மீது சந்தேகமும் கோபமும் அதிகமாகிறது. இதற்கிடையில், ஷீலா கபிலனின் நடவடிக்கைகள் எல்லை மீறிப் போவதாகவும், அவனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பேசுகிறாள். அடுத்து யாரைக் குறிவைக்கலாம் என்ற பேச்சு வரும்போது, “அடுத்தது ரித்திகாவைத்தான் தூக்கப் போறோம்” என்று முடிவு செய்கிறார்கள்.
இன்னொரு பக்கம், ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு வரும் ட்ரக் எந்த வழியாக வருகிறது, அதை எங்கே வைத்து மடக்கிப் பிடிக்கலாம் என்று சிவா அதிரடியாகத் திட்டம் போடுகிறான். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது. மறுபக்கம், வீட்டில் இந்திராணியும் மற்றவர்களும் கபிலனைப் பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று பதற்றத்துடன் காத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு வரும் ரித்திகா, அயலி பற்றிய உண்மையை அனைவரிடமும் சொல்லிவிடுகிறாள்.
அயலி பள்ளிக்கூடத்துக்கே போகவில்லை என்றும், ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க இவ்வளவு நேரமா ஆகும் என்றும் கேள்வி எழுப்புகிறாள். வீட்டில் இருப்பவர்கள் இதை நம்ப மறுக்க, உடனே பள்ளி ஆசிரியருக்கே போன் செய்து விசாரிக்கிறாள். அப்போது, “அயலி இன்னைக்கு பள்ளிக்கூடத்துக்கே வரவில்லை” என்று ஆசிரியர் சொல்ல, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் அயலி எங்கே சென்றாள் என்று அனைவரும் அவளிடம் கேள்வி கேட்கத் தொடங்குகிறார்கள்.
அயலி எங்கே சென்றாள்? அவள் எதற்காகப் பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை? இந்திராணியின் சந்தேகத்திலிருந்து கபிலன் தப்பிப்பானா? ரித்திகாவைக் குறிவைக்கும் சிவாவின் திட்டம் என்னவாகும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அப்டேட்: கர்ணாவை சிக்க வைக்க கிருபாவின் சதித் திட்டம்… பயத்தில் தவிக்கும் இந்து!
‘சின்னஞ்சிறு கிளியே’ சீரியலில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.
பாத்ரூமில் நனைந்ததால் கர்ணாவுக்கு இரவு முழுவதும் தொடர்ந்து தும்மல் வந்துகொண்டே இருக்கிறது. இதைப் பார்த்து பதறிப்போகும் இந்து, “ஆவி பிடித்தால் சரியாகிடும், இந்த தைலத்தை எடுத்துக்கோங்க” என்று அக்கறையோடு கர்ணாவிடம் சொல்கிறாள். இன்னொரு பக்கம், கிருபா, திவாகர், விஸ்வா மூன்று பேரும் நள்ளிரவில் ஒன்றாகச் சேர்ந்து கர்ணாவை சிக்க வைக்கத் திட்டம் போடுகிறார்கள்.
இதில் கிருபா என்ன திட்டம் வைத்திருக்கிறான் என்பது விஸ்வாவுக்கு மட்டும்தான் தெரியும். திவாகருக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது. “ஏதாவது செய்ய வேண்டாமா?” என்று திவாகர் கேட்க, “நான் ஏற்கனவே எல்லாத்தையும் திட்டம் போட்டாச்சு” என்று கிருபா சொல்கிறான். அதோடு, உடனே கர்ணாவை அங்கே வரவழைக்கும்படியும் கூறுகிறான்.
இந்த நேரத்தில் கர்ணாவை அழைப்பதைப் பார்த்து இந்து பயப்படுகிறாள். “இந்த நேரத்துல எதுக்கு கூப்பிடுறாங்க? இப்போ போக வேண்டாம்” என்று கர்ணாவைத் தடுக்கிறாள். ஆனால் கர்ணாவோ, “சின்ன வேலைதான், உடனே வந்துடுறேன்” என்று அவளைச் சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். அங்கே சென்றதும் கர்ணாவிடம் பணத்தைக் கொடுக்கும் கிருபா, அதை கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு வரும்படி சொல்கிறான். கர்ணாவும் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிறான்.
கர்ணா அங்கிருந்து சென்றதும், தான் போட்டிருக்கும் உண்மையான திட்டத்தை கிருபா மற்றவர்களிடம் சொல்கிறான். கர்ணா போகும் வழியில் ஒரு பெண்ணை நிற்க வைத்து லிப்ட் கேட்கச் செய்வது, அவன் உதவி செய்ய முன்வரும்போது அவனுக்கு மயக்க மருந்து கொடுப்பது எனத் திட்டமிடுகிறார்கள். அதன்பிறகு, கர்ணா மீது ஒரு பழியைப் போட்டு அவனை அவமானப்படுத்த வேண்டும் என்பதுதான் கிருபாவின் நயவஞ்சகத் திட்டம்.
“உன் கணவனின் உயிருக்கு ஆபத்து இருக்கு” என சாமியார் சொன்ன வார்த்தைகள் இந்துவின் நினைவுக்கு வருகின்றன. இதனால் கர்ணாவுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அவள் பயத்தில் தவிக்கிறாள். கர்ணா வண்டியில் சென்றுகொண்டிருக்க, இந்துவுக்குத் தூக்கமே வரவில்லை. பதற்றத்துடன் இருக்கும் அவள், உடனே கர்ணாவுக்குப் போன் செய்து, “இன்னும் ஏன் வரல? எனக்கு ரொம்ப பயமா இருக்கு, சீக்கிரம் வந்துடுங்க” என்று கலக்கத்துடன் சொல்கிறாள்.
அதற்கு கர்ணாவும், “வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கேன், இதோ வந்துடுவேன்” என்று அவளைச் சமாதானப்படுத்துகிறான். இதற்கிடையில், கர்ணாவை வழியில் மடக்கிப் பிடிக்க வேண்டிய பெண்ணை விஸ்வா தயாராக நிற்க வைக்கிறான். “எல்லாம் தயாரா?” என்று கிருபா கேட்க, “எல்லாம் திட்டம் போட்டபடி ரெடியா இருக்கு. அவன் வந்ததும் வேலை முடிஞ்சிடும்” என்று விஸ்வா சொல்கிறான்.
இப்போது கிருபாவின் சதித் திட்டத்தில் கர்ணா சிக்குவானா? இந்துவின் பயமும் உள்ளுணர்வும் அவனுக்கு வரப்போகும் ஆபத்தை உணர்த்துமா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
