“மனசாட்சியை உறுத்துகிறது…. அந்த அவமானம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்” – ஜான்வி கபூர்

பிரபல நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக கடந்த ஜூனில் வெளியான ‘பெத்தி’ படத்தில் நடித்திருந்தார். இதில் இவரது காட்சிகள் பெரும் சர்ச்சையை சந்தித்தது. அதாவது அவரது காட்சிகள் எல்லை மீறிய கவர்ச்சியுடன் இருப்பதாகவும் நடிகையை வெறும் கவர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து அவரது சர்ச்சையான காட்சிகளை படக்குழு நீக்கியது. 

இந்த சர்ச்சை குறித்து ஜான்வி கபூர் வெளிப்படையாக எதுவும் பேசாமல் இருந்த நிலையில் தற்போது பேசியுள்ளார். ‘காஃபி வித் கரண் 9’ நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “அந்த சமயத்தில் எனக்குள் பல உணர்வுகள் இருந்தது. இதைப் பற்றிப் பேச நான் ஏன் இவ்வளவு தயங்கினேன் என்றால், அந்தத் திரைப்படத்திற்காகப் பலர் மிகவும் கடினமாக உழைத்திருந்தார்கள். எனவே, நான் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தச் சர்ச்சையில் எனது பங்கிற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வது அவசியம். ஏனெனில், இது போன்ற சித்தரிப்புகள் நம் சமூகத்தின் மீது, குறிப்பாகப் பெண்கள் மீது ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கம் என் மனசாட்சியை உறுத்துகிறது. அந்த அவமானத்தை நான் எப்போதும் சுமந்துகொண்டே இருப்பேன்.

நான் இன்னும் கூடுதலாக விழிப்புடன் இருந்திருக்கலாமா? என்று கேட்டால் நிச்சயமாக, ஆம் என்று சொல்வேன். அது பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்ததா? என்றால் அதற்கும் ஆம் என்று சொல்வேன். ஆனால், இப்போது என்னால் செய்யக்கூடிய ஒரே விஷயம், இனி இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதுதான். அதே போல் பிரச்சனை குறித்து பேசினால் மற்றவர்கள் மீது பழி சுமத்துவது போல இருக்கும். அதனால் எனக்கு விரிவாக பேச விருப்பமில்லை. ஆனால், சூழல் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதைத்தான் செய்ய வேண்டும்.

முழுமையான திரைக்கதை (bound script) அங்கு கிடைப்பது மிகவும் அரிது. மேலும், அந்தத் திரைக்கதைகளில் கேமரா கோணங்கள் எங்கே இருக்கும் என்பதும் பெரும்பாலும் இருக்காது. இருப்பினும், இதில் என் பங்கிற்கு நான் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.