”இனி பணத்தை சேர்த்து வைப்பது வேஸ்ட்”-உலகப் பணக்காரர் எலான் மஸ்க் ஓபன்

எதிர்காலத் தேவைகளுக்காகவும், அவசர காலப் பாதுகாப்பிற்காகவும் மக்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகப் பணத்தைச் சேமிப்பதுதான் உலக வழக்கம். ஆனால், இனிவரும் காலங்களில் வருங்காலத்திற்காகப் பணத்தைச் சேமித்து வைப்பது முற்றிலும் அர்த்தமற்ற ஒரு வீணான செயலாக மாறிவிடும் என்று கூறி உலக மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் உலகின் முன்னணிப் பணக்காரரான எலான் மஸ்க்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உருவ ரோபோக்களின் அபரிமிதமான வளர்ச்சியானது, நாம் வாழும் உலகை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறது என்றும், அதன் பிறகு மனிதர்களுக்குப் பணத்தின் தேவையே இருக்காது என்றும் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மஸ்கின் இந்த அதிரடிக் கருத்து தற்போதைய நவீனப் பொருளாதார வல்லுநர்கள் மத்தியிலும், உலக அளவிலும் மிகப்பெரிய விவாதப்புயலைக் கிளப்பியுள்ளது.

சமூக வலைத்தள பயனர் ஒருவர், எதிர்காலத்தில் ரோபோக்களே அனைத்தையும் செய்யப் போகிறது என்பதால் தற்போதைய நிதி சார்ந்த முடிவுகள் சில ஆண்டுகளில் மதிப்பற்றதாகிவிடும் என்று நகைச்சுவையாகப் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், எதிர்காலத்தில் வரவிருக்கும் ‘சூப்பர் இன்டெலிஜென்ட் அபண்டன்ஸ்’ அதாவது ‘செயற்கை நுண்ணறிவு சார்ந்த அதீத வளம்’ நிறைந்த உலகத்தில், எதிர்காலத்திற்காகப் பணத்தைச் சேமிப்பது என்பது முற்றிலும் தேவையற்ற ஒன்று எனப் பதிவிட்டுள்ளார். இந்தத் தொழில்நுட்பப் புரட்சியினால் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும், சேவைகளும் மிக எளிதாகவும் மலிவாகவும் அனைவருக்கும் கிடைக்கப் போகிறது. இதனால் மனிதர்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காகக் கடினமாக உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது என்பது மஸ்கின் மிக முக்கியமான கணிப்பாக உள்ளது.