உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராமாயணம் திரைப்படத்தை தயாரித்துள்ள நமித் மல்ஹோத்ரா இந்த படத்திற்கு பிறகு அடுத்து ராஜமௌலியுடன் இணைந்து மகாபாரதம் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து அவரே பதில் அளித்துள்ளார்.
2026-ம் ஆண்டில் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று ராமாயணம். 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில்,ரன்வீர் கபூர், சாய் பல்லவி, யஷ், பாபி தியோல், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 5-ந் தேதி ‘ராமாயணம்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எல்.ஏ (LA) சிறப்புக் காட்சி நிகழ்வில் சிவப்புக் கம்பள வரவேற்பில் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா கலந்துகொண்டார்.
இந்திய இதிகாசத்தை ஹாலிவுட் பாணி காவியமாக மாற்றும் தனது தொலைநோக்கு பார்வையால் ரசிகர்களைக் கவர்ந்த நமித் மல்ஹோத்ராவிடம், ராமாயணம் படத்திற்கு பிறகு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியுடன் இணைந்து ‘மகாபாரதம்’ படத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
சிவப்புக் கம்பள வரவேற்பில் ஒரு விமர்சகருடனான உரையாடலின் போது, ‘ராமாயணம்’ மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நமித் மல்ஹோத்ராவிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது அடுத்த பெரிய திட்டம் குறித்தும் கேட்கப்பட்டது. அந்த வீடியோவில், “எஸ்.எஸ். ராஜமௌலியுடன் இணைந்து ‘மகாபாரதம்’ படத்தை எப்போது எடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. இந்த ஆலோசனையைக் கேட்டு சிரித்த நமித் “அவர் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். அவர் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்” என்று அன்புடன் பதிலளித்தார்.
ராஜமௌலியுடன் இணைந்து அந்த இதிகாசப் படத்தை உருவாக்குமாறு வற்புறுத்தப்பட்டபோது, “நம்முடைய அனைத்து இந்திய சினிமாக்களும் வெற்றி பெற வேண்டிய நேரம் இது” என்று மல்ஹோத்ரா பதிலளித்தார். மேலும் தான் பல பாகங்களாக உருவாக்கும் ராமாயணத் திரைப்பட தழுவலை, ஒரு பிரம்மாண்டமான, ஒன்றுக்கொன்று தொடர்புடைய புராண சினிமா பிரபஞ்சமாக (Cinematic Universe) விரிவுபடுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக விரைவில் சன்னி தியோல் ‘ஹனுமானாக’ நடிக்கும் தனிப் படங்களையும், ராமாயணத்தில் வரும் சூர்ப்பணகை, ஜடாயு, இந்திரஜித் மற்றும் அங்கதன் போன்ற கேரக்டர்களை மையமாகக் கொண்ட தனித்துவமான பங்களையும் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ராஜமௌலியுடன் இணையும் திட்டம் குறித்து மல்ஹோத்ரா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இருவரும் பரஸ்பர மரியாதையை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர். இது குறிப்பாக இவர்கள் இருவரும் எதிர்காலத்தில் ‘மகாபாரதம்’ திரைப்படத்தில் இணையக்கூடும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
@ssrajamouli garu thank you so much for your words of encouragement. Like you, we are also doing our best to put our cinema on the world stage. Here’s wishing you and team #Varanasi the very best to take over the world. 🌎 🙏👍
— Namit Malhotra (@malhotra_namit) October 17, 2026
நித்தீஷ் திவாரி மற்றும் மல்ஹோத்ராவின் வரவிருக்கும் திரைப்படத்தின் பிரம்மாண்டத்தையும் லட்சியத்தையும் ராஜமௌலி சமீபத்தில் பாராட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த மல்ஹோத்ரா, “சார் உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்குமிக்க நன்றி. உங்களைப் போலவே, நாங்களும் எங்கள் சினிமாவை உலக அரங்கில் கொண்டு சேர்க்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம். உலகைக் கைப்பற்ற உங்களுக்கும் வாரணாசி குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார். இருப்பினும், இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
