தேர்தல் முடிவால் ரஜினி வருத்தம்.. நீங்களாவது ஜெயிச்சிருக்கலாம்னு சொன்னார்! சீமான் பகிர்ந்த சீக்ரெட்

சென்னை: தேர்தல் முடிவால் ரஜினிகாந்த் வருத்தப்பட்டார் என்றும், நீங்களாவது ஜெயிச்சிருக்கலாம்னு என்று என்னிடம் சொன்னதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும், “எனக்கு ஒரு குறை என்ன என்றால், நீண்ட காலமாக கூண்டுக்குள் இருக்கிறேன். ஒரு தடவை கூரை மேலே ஏறிவிட்டேன் என்றால் என்னுடைய குரலை நிராகரிக்க முடியாது..” என்று கூறினார்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதையடுத்து காலியாக உள்ள தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பை தொகுதியில் போட்டியிட இருப்பதாக சீமான் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சீமான், சட்டமன்ற தேர்தல் முடிவால் ரஜினி வருத்தப்பட்டதாகவும், நீங்களாவது ஜெயிச்சுருக்கலாம் என்று தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறியதாவது:

“பொதுவான மக்கள், சமூக ஆர்வலர்கள் ஒரு நல்ல அரசியல் அமைய வேண்டும் என விருப்பம் கொண்ட அரசியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்தாளர்கள் எல்லாரும் சொல்வது என்னவென்றால் நீ ஒருத்தனாவது வென்று உள்ளே போயிருக்களாம். ரஜினிகாந்த் கூட சொன்னார். அப்பா பாரதிராஜா மறைவிற்கு வந்திருந்த போது நானும் ரஜினிகாந்தும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது அந்த துயரத்தையும் தாண்டி அவங்க ரொம்ப வருத்தப்பட்டது என்ன என்றால் தேர்தல் முடிவு குறித்து தான். பிறகு நீங்களாவது ஜெயிச்சு இருக்கலாம். ரொம்ப கஷ்டம் அதுல.. ரொம்ப கஷ்டமாக, வருத்தமாக இருந்துச்சு என்று சொன்னாங்க.. இப்படி எல்லாருக்குமே ஒரு வருத்தம் அதில் இருக்கு. அப்படி எல்லாருக்குமே இதில் ஒரு வலி இருக்கு.

நான் வந்து சட்டமன்றத்தில் உள்ளே இருந்து பேசும்போது தான், அதை எல்லாம் மக்கள் கேட்கும் போது தான்.. ஓ, இவ்வளவு எல்லாம் செய்தி இருக்கா.. இவ்வளவு எல்லாம் பிரச்சினை இருக்கா என மக்களுக்கு தெரியும். எனக்கு ஒரு குறை என்ன என்றால், நீண்ட காலமாக கூண்டுக்குள் இருக்கிறேன். ஒரு தடவை கூரை மேலே ஏறிவிட்டேன் என்றால் என்னுடைய குரலை நிராகரிக்க முடியாது..

கூண்டுக்குள் இருந்து கத்துவதால் என் சத்தம் எல்லாருக்கும் கேட்காது. கூரை மேலே ஏறி கத்தினால் என் சத்தத்தை நிராகரிக்க முடியாது. என் கருத்தை செவிசாய்த்துத் தான் தீரனும்..” என்று பேசினார்.