முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு : மன்னிப்பு கோரிய தி.மு.க. கவுன்சிலர் சுதா!

சென்னையில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய பெண் நிர்வாகியும் சென்னை கவுன்சிலருமான சுதா தீனதயாளன், முதல்வர் விஜய் குறித்துத் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில், த.வெ.க. துறைமுக பகுதி செயலாளர் உதயகுமார் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 07.10.2026 அன்று மாலை ராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் முப்பெரும் விழா துறைமுக பகுதி செயலாளர் முரளி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்விழாவில் தி.மு.க.வை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவைத் தலைமை ஏற்று உரையாற்றிய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வில்லிவாக்கம் பகுதி தி.மு.க 95வது வட்ட கவுன்சிலர் சுதா தீனதயாளன் பேசும்போது தமிழக முதலமைச்சர் விஜய் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இரு தரப்பினர்களிடையே பிரச்சனை உண்டாக்கும் நோக்கத்திலும், பொது மக்களிடையே பதற்றம் ஏற்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளார். எனவே சுதா தீனதயாளன் மற்றும் இவ்விழாவை ஏற்பாடு செய்த முரளி ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு  விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று (29.10.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதாவின் சார்பில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்  செய்யப்பட்டது. அதில், “எனது பேச்சுக்கு ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். அதற்கு நீதிபதி, “பொதுவெளியில் சுதா  பேசியதால் அவரது ,மன்னிப்பும் பொது வெளியில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.