தேச நலனில் அக்கறை கொண்டவர் முத்துராமலிங்க தேவர்

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி

டாக்டர் வைகைச்செல்வன்,

முன்னாள் அமைச்சர், த.வெ.க.,

தேசியமும், தெய்வீகமும் என் இரண்டு கண்கள் என, ஊருக்கும், உலகிற்கும் உரைத்த உத்தமர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ஒரு நாள் சிறுவனாக இருந்த முத்துராமலிங்கத் தேவரிடம், ஆசிரியராக இருந்த கிறிஸ்தவ பாதிரியார், ‘நீ ஹிந்து; உன்னை ஒன்று கேட்கிறேன்… இதோ இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும் தெய்வமா?’ என்று கேட்டார். அதற்கு சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவர், ‘ஐயா… ஒரு கல்லில் துணி துவைக்கலாம், அம்மி அரைக்கலாம். மற்றொரு கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம். ஆனால், துணி துவைக்கும் கல்லில் துணியை மட்டுமே துவைக்க முடியும் அதை கடவுளாக வணங்க முடியாது. அதேபோல, அம்மிக்கல்லை அரைக்கத்தான் பயன்படுத்துவரே அன்றி, கடவுளாக யாரும் கும்பிட மாட்டார்கள். சுவாமி சிலையும் அப்படித்தான்… அது வணங்குவதற்காக மட்டுமே. கல் என்பது ஒன்று தான். அதில், மூன்று விதமான செயல்கள் நிகழ்கின்றன’ என்றார். அவரின் விளக்கத்தால் வாயடைத்து போன பாதிரியார், அன்றிலிருந்து தேவருக்கு பள்ளியில் இரட்டிப்பு மதிப்பு கொடுக்கத் துவங்கினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினமான ஜனவரி, 23, 1948ம் ஆண்டு, முத்துராமலிங்க தேவரை ஆசிரியராக கொண்டு, ‘நேதாஜி வாரப்பத்திரிகை’ தொடங்கப்பட்டது. அதில், காங்கிரஸ் கட்சியின் தவறான செயல்பாடுகளை தேவர் சுட்டிக்காட்டி, நாட்டு மக்களின் நலனுக்காகவே அரசியல் கட்சிகளே தவிர, அரசியல் கட்சிகளின் நலன்களுக்காக மக்கள் அல்ல என்று எடுத்துரைத்தார்.

கடந்த, 1949 டிசம்பரில் இந்திய எல்லையை கடந்து ரகசியமாக சீனா சென்றார். ஓராண்டு காலம் தேவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. மதுரை தமுக்கம் மைதானத்தில், 1951 ஜனவரி 23ல், நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவர், வடகொரியா போர் முனையில் நின்று, அந்த யுத்தத்தை நேரடியாக பார்த்து விட்டுத்தான் உங்கள் முன்னால் நிற்கிறேன் என்று ஆரம்பித்து, உலக அரசியல் பற்றி, 3 மணிநேரம் உரை நிகழ்த்தினார்.

கடந்த, 1952ல் பொதுத்தேர்தல் வந்தது. சென்னை மாகாணமானது தமிழகம், ஆந்திரத்தில் சில மாவட்டங்கள், கேரளத்தில் சில மாவட்டங்கள், கர்நாடகத்தில் சில மாவட்டங்கள் சேர்த்து, 375 தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இந்தத் தேர்தல் களத்தில் தேவரும், பெரியாரும், காங்கிஸ் கட்சியை எதிர்த்து முழு மூச்சாக வேலை செய்தனர். அருப்புக்கோட்டை லோக்சபா தொகுதியிலும், முதுகுளத்துார் சட்டசபை தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும், தேவர் அமோக வெற்றி பெற்றார். தேர்தலுக்காக மனுத்தாக்கல் செய்ததுடன் சரி; பிரசாரத்துக்கு செல்லவில்லை. இருப்பினும், மக்களின் அமோக ஆதரவோடு மகத்தான வெற்றிச் சரித்திரம் படைத்தார்.

இதன்பின், 1952ல் தேர்தலிலும், லோக்சபா மற்றும் சட்டசபை என, இரண்டிலும் வெற்றி பெற்ற தேவர், எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அருப்புக்கோட்டை

லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் சார்பில் மறவர் இனத்தைச் சேர்ந்த ராசாத்தி அம்மாளுக்கு எதிராக, செட்டியார் இனத்தை சேர்ந்த

எம்.டி.ராமசாமியை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் பசும்பொன் தேவர், ஜாதிகளை கடந்து தேச நலன் ஒன்றேயே குறிக்கோளாக கொண்டு தன்

வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர் என்பது உலகிற்கு தெரிந்தது.

கடந்த, 1955ல் திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளத்தில், ஆன்மீகஞானி ஆறுமுக நாவலர் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, அங்குள்ள

கிறிஸ்தவர்களால் இடையூறு ஏற்படுவதை போன்ற சூழ்நிலை உருவானது. இதை அறிந்த தேவர், அந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டதால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ‘எந்த மதத்தின் நிகழ்ச்சிகளையும், அடுத்த மதத்தினர் தடுத்து நிறுத்துவதற்கு உரிமை இல்லை. அது, தவறான விளைவுகளை ஏற்படுத்தி விடும்’ என்ற தேவரின் பேச்சு, அனைவராலும் அப்போது வரவேற்கப்பட்டது.

கடந்த, 1951 பிப்ரவரி, 17ம் தேதி லோக்சபாவில், இந்திய வெளிநாட்டு கொள்கையில் உள்ள குறைபாடுகள் குறித்து, புள்ளி விவரங்களோடு தேவர் ஆற்றிய

உரை எல்லோரையும் வியக்க வைத்தது. காஷ்மீர் விவகாரம், பாகிஸ்தானின் அத்துமீறல்கள் மற்றும் சர்வதேச அரசியல் பற்றி அவர் பேசிய விதம் கண்டு எதிர்க்கட்சி எம்.பி.,க்களுடன், காங்கிரஸ் எம்.பி.,க்களும் பாராட்டினர். அவர் உதிர்த்த பொன்மொழிகளை நம் நெஞ்சிலே தாங்க வேண்டிய பல்வேறு விஷயங்களில் இதுவும் ஒன்று.

அதாவது, ‘பதவியை நான் பெரிதாக நினைக்கவில்லை, அப்படி நான் நினைத்திருந்தால் என்னை பொறுத்தவரை அது மிக மிக எளிது. இந்தத் தேசத்திடம் பலனை எதிர்பார்க்கும்

எண்ணம் எப்போதும் எனக்கு இல்லை. இந்த தேசத்திற்காக முடிந்த வரை சேவை செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன் நான். தவறுகளைக் கண்டிக்கிற என்னை, யாரேனும்

எதிரியாகப் பாவித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

‘நான் பேசுவது, எழுதுவது, சேவை செய்வது எல்லாமே இந்தத் தேசத்திற்காகத்தானே தவிர, எனக்காக அல்ல. நியாயத்திற்காக எதிர்நீச்சல் அடிப்பதால், காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்புக்கு நான் ஆளாகி இருக்கிறேன். 18 ஆயிரம் ஓட்டுகளைக் கொண்ட என் வகுப்பினர் வாழும் தொகுதியில், ஒரு லட்சம் ஓட்டு வாங்கும் நான், எப்படி வகுப்புவாதியாக இருக்க முடியும். தம்மிடம் உள்ள வகுப்புவாதத்தை மறைக்க பிறரை வகுப்புவாதி என்று கூறுவதை மக்கள் அடையாளம் கண்டு கொள்வர்.

‘எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் இரண்டு கண்களில் ஒன்று, இரு கண்களும் சமசக்தியோடு செயல்பட்டால் அன்றி, ஜனநாயகம் வலிமையோடு நடக்க முடியாது. உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமையல்லவா ஓட்டுப் போடுவது. காசுக்காக காத்திருக்காமல், அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு இரண்டோ, மூன்றோ எடுத்துப் போய் செலவிட்டு ஓட்டுப் போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்’ என்று அவர் உதிர்த்த விலைமதிக்க முடியாத பொன்மொழிகளோடு, அவரின் பெருமைகளை ஆரத் தழுவுவது எப்போதும் நமக்கு மகிழ்வான ஒன்று தானே!

Source link