பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழா நேற்று (29.10.2026) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார். அதன் பின்னர் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலப் பதக்கங்களோடு முதலிடத்தைப் பிடித்த சென்னை  மாவட்டத்திற்கும்,  64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களோடு இரண்டாம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலப் பதக்கங்களோடு மூன்றாம் இடத்தைப் பிடித்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் கோப்பைகளை வழங்கி, விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைப் பாராட்டினார். 

அதோடு  வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கிப் பாராட்டினார். மேலும், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 6 கோடியே 85 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டம், பிரப்பன்வலசையில் 42 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலிம்பிக் நீர்விளையாட்டு அகாடமி, சேலம் மாவட்டம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 20 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகம் ஆகியவற்றையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். தேசிய இளையோர் தடகளப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர். வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர்  விஜய்யுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.