துாத்துக்குடி: வீடு புகுந்து வெட்டப்பட்ட தொழிலாளி உயிரிழந்தார். இந்த வழக்கில், கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், முதலுாரை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், 52. அக்., 23 இரவு மனைவி மேரி ரெஜிலா, 48, மகன் பிளஸெண்ட் ராஜா, 14, மற்றும் இரு மகள்களுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்த நபர் வெட்டியதில், மேரி ரெஜிலா உயிரிழந்தார். காயமடைந்த முத்துக்கிருஷ்ணனும், பிளஸெண்ட் ராஜாவும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
மகள்கள் இருவரையும், கொலையாளி, அரிவாளை காட்டி மிரட்டி அழைத்துச் சென்றார். தட்டார்மடம் போலீசார், ஆனந்தபுரம், பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாஷ், 23, என்பவரை கைது செய்து, மகள்கள் இருவரையும் மீட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முத்துக்கிருஷ்ணன், நேற்று உயிரிழந்தார்.
முத்துக்கிருஷ்ணனின் மூத்த மகளுடன் ஞானபிரகாஷ் நெருங்கி பழகியதை, குடும்பத்தினர் கண்டித்ததால், அவர் கொலையில் ஈடுபட்டது தெரிந்தது.
இதற்கிடையே, கைதாகி சிறையில் உள்ள ஞானபிரகாஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில், நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சிறையில் உள்ள ஞானபிரகாஷிடம் நேற்று வழங்கப்பட்டது.
