பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி மற்றும் 64ஆவது குருபூஜை விழா இன்று அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது இதனை ஒட்டி மதுரை முதல் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் வரை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிர படுத்தப்பட்டுள்ளனர் மேலும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதால் காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தியுள்ளனர்.மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கும் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் ,அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
இதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் பால்குடம் எடுத்தும், தேவர் சிலைக்கு அபிஷேகம் செய்தும் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிப்பாளையம் பகுதியில் கூட்டங்களை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 7 டிஐஜிக்கள் மற்றும் 40 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் டி.எஸ்.அன்பு தலைமையில் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள், முக்கிய வழித்தடங்களில் கண்காணிப்பு மற்றும் நான்கு மாவட்ட காவல்துறையினரின் ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
118 இடங்களில் வாகனத் தணிக்கை – 480 கண்காணிப்பு கேமராக்கள்
விழாவிற்கு வரும் வாகனங்களைக் கண்காணிக்கும் வகையில் முக்கியச் சாலைகள் மற்றும் பதற்றம் ஏற்படக்கூடிய பகுதிகளில் 118 இடங்களில் வாகனத் தணிக்கைச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக காணொளிக் கண்காணிப்பு மற்றும் இணையவழி வாகன விவரங்களைச் சரிபார்க்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பசும்பொன் மற்றும் முக்கிய வழித்தடங்களில் 480 உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நவீன ட்ரோன்கள் மற்றும் நடமாடும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் பாதுகாப்புப் பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பசும்பொன்னில் மூன்று நாட்கள் நடைபெறும் விழா
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்கள் விழா நடைபெறுகிறது.
அக்டோபர் 28-ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர். அக்டோபர் 30-ம் தேதி அரசு விழாவும் நடைபெறுகிறது.
இதனால் பசும்பொன் பகுதியில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை அமைதியான முறையில் நடத்துவதற்காக காவல்துறை விரிவான பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் காவல்துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
