நாடு முழுவதும் இன்று 9.34 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,680 கோடி நிதியுதவி விடுவிக்கிறார் பிரதமர் மோடி

-நமது நிருபர்-

விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பும், ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி’ அதாவது ‘பி.எம்., கிசான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

நாடு முழுதும் உள்ள சிறு, குறு விவசாயிகளை இலக்காக வைத்து, அவர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

இதுவரை 23 தவணைகளாக 4.47 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் இருந்து இன்று (அக்டோபர் 30) பிரதமர் மோடி 24வது தவணத் தொகையை விடுவிக்கிறார். 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் விகிதம் மொத்தம் 18 ஆயிரத்து 680 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் மட்டும் 52.33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1,051 கோடி விடுவிக்கப்பட உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 2 ரயில் சேவைகளை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். ஆமதாபாத் மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

Source link