‘வில்வ இலையை வாயில் திணித்து சித்திரவதை, போலீஸ் போன அப்புறம் எங்களை என்ன செய்வாங்களோ?’: கிறிஸ்தவ குடும்பங்கள் அலறல்

Ravik Bhattacharya, Sweety Kumari

மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. அவற்றில் நான்கு குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றன. இதில் உறவினர்களான மூன்று குடும்பங்கள் மீது கடந்த அக்டோபர் 18 முதல் 20 வரை தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மண் வீட்டின் வாசலில் கணவர், பதின்ம வயது மகள் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மாமனாருடன் அமர்ந்திருக்கும் 40 வயதுப் பெண், கடந்த அக்டோபர் 18 அன்று தான் சந்தித்த கொடூரத்தை விவரிக்கிறார்.

“அன்று மதியம் 3:30 மணி இருக்கும். மூன்று பெண்கள் உட்பட ஒரு பெரிய கும்பல் எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது. என்னையும் என் கணவரையும் வெறியோடு வெளியே இழுத்து வந்து அடித்தார்கள். ஊரே வேடிக்கை பார்க்க, என் உடைகளைக் கிழித்து, வாலி வாலியாகத் தண்ணீரைக் கொட்டி ‘சுத்திகரிப்பு’ செய்கிறோம் என்று கத்தினார்கள். வில்வம், துளசி இலைகளை என் வாயில் திணித்து வலுக்கட்டாயமாக மெல்ல வைத்தார்கள்.

நாங்கள் வீட்டிலேயே செம்பு ஆபரணங்கள் செய்துதான் பிழைப்பு நடத்துகிறோம். “பணத்துக்காகத்தானே கிறிஸ்தவ மதத்துக்கு மாறினீர்கள்?” என்று எங்களை கண்டபடி திட்டினார்கள். அத்துடன் நிற்காமல், எங்கள் உறவினர்களின் வீடுகளுக்கும் சென்று அங்கே இருந்த ஒரு சிறுமியைத் தாக்கி, பாலியல் அச்சுறுத்தல் விடுத்தார்கள். ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 20,000 ரூபாயையும் திருடிச் சென்றார்கள்.

போலீசுக்குத் தகவல் கொடுத்தோம் என்று தெரிந்து, மறுநாள் அக்டோபர் 19 காலை மீண்டும் வந்தார்கள். ஆத்திரமடைந்த கும்பல், எங்களை அருகில் உள்ள கிராமத்தின் துர்கா மண்டபத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வழிபாடு செய்ய வைத்தது. உயிரைக் கையப் பிடித்துக்கொண்டு வந்து வீட்டிற்குள் பூட்டிக் கொண்டோம். அடுத்த நாளும் எங்கள் வீட்டு ஆண்களை மிரட்டினார்கள். அவர்கள் வீட்டிற்கு வந்து அழுததைப் பார்த்ததும், எங்கள் பாதுகாப்புக்காக இளம்பெண்களை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம்.

சபையின் மூத்த உறுப்பினர்கள் கொடுத்த தைரியத்தில்தான் காவல் துறையை அணுகினோம். போலீஸ் வந்து எங்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து, வழக்குப் பதிவு செய்தது. 

இப்போது எங்கள் கிராமத்தில் போலீஸ் ரோந்து போகிறார்கள். ஆனால், எங்களைத் தாக்கியதாக நாங்கள் அடையாளம் காட்டியவர்களில் ஒருவரைக் கூட போலீஸ் இன்னும் கைது செய்யவில்லை. ஊரே எங்களைப் புறக்கணித்துவிட்டது. இப்போதும் மறைமுகமாக மிரட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போது இந்த போலீஸ்காரர்கள் பாதுகாப்பிற்கு இருக்கிறார்கள்… நாளை இவர்கள் இங்கிருந்து கிளம்பிய பிறகு எங்களுக்கு என்ன நடக்கும்? நினைத்தால் நெஞ்சு பதறுகிறது” என்று அந்த பெண்மணி கண்கலங்க கூறுகிறார்.

கொள்ளை, கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் பெண்ணின் கண்ணியத்திற்குத் பங்கம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சந்திரகோனா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறியதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அமைதி நிலவுகிறது, விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது,” என பஸ்சிம் மேதினிபூர் எஸ்.பி பாபியா சுல்தானா தெரிவித்துள்ளார்.

கிராம மக்களின் மறுப்பு

ஆனால், கிராம மக்கள் இக்குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கின்றனர். தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றும், வெறும் வாய்மொழி எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்குடும்பங்கள் மதமாற்றம் அடைந்ததைச் சுட்டிக்காட்டும் கிராம மக்கள், துர்கா பூஜை போன்ற புனித நாட்களில் அக்குடும்பங்கள் அசைவ உணவு சமைப்பது தங்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

தாக்குதலுக்கு ஆளான பெண், தனது மகளின் பள்ளிப் பொதுத்தேர்வு குறித்துப் பெருமளவு கவலைப்படுகிறார்.

”எனக்கு எல்லாம் என் மகளைப் பற்றித்தான் கவலையாக இருக்கிறது. அவளுக்குப் பொதுத்தேர்வு வரப்போகிறது. இந்தச் சம்பவத்தால் அவள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாள்; டியூஷனுக்குக் கூடப் போக முடிவதில்லை. பூஜா விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்தால் அவள் எப்படிப் போவாள்?

இது சுதந்திர நாடு இல்லையா? அமைதியான முறையில் எனது மதத்தைப் பின்பற்றி வாழ எனக்குச் சட்டப்படி உரிமை இல்லையா?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

Source link