‘மது பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கக் கூடாது, ஆனால்…’ – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. அதாவது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக கூடுதலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு, அதன் பின்னர் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப அளித்து அந்த ரூ.10யை பெற்றுக்கொள்ளலாம் என நடைமுறை இருந்து வருகிறது.

ஆனால், சில கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10யை வசூலித்த பின், அந்த காலி பாட்டில்களை கொடுத்தால் ரூ.10யை ஊழியர்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றப் பிறகு, கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள பல டாஸ்மாக் கடை ஊழியர்கள், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது தொடர்பான புகார்களை மதுபிரியர்கள் வீடியோக்கள் மூலம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், நவம்பர் 1ஆம் தேதி மதுபானக் கடைகளில் மதுபாட்டிலுக்கு அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் காலி மது பாட்டிலுக்காக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.10 கட்டணத்தை மதுபானங்களின் நிர்ணய விலையுடன் சேர்த்து விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மதுபானங்களின் விலையுடன் ரூ.10யும் எம்.ஆர்.பி (MRP)இல் சேர்க்கப்படுகிறது. அதே வேளையில், காலி மதுபாட்டிலைத் திருப்பி வழங்கும் நுகர்வோருக்கு ரூ.10 திரும்ப வழங்கும் நடைமுறையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.