“சப்பாத்தி தான்.. உடன் எடை குறைந்துவிட்டது…” – நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு வாதம்!

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பாக அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கெனவே அன்பில் மகேஷ் அளித்த ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (30-10-26) நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு வந்தது. இந்த விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்த விசாரணையின் போது அன்பில் மகேஷ் தரப்பில் வாதிட்டதாவது, ‘20 ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரியது தனியார் பள்ளிகள் தான். அந்த கோரிக்கையை ஏற்று 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிப்பு என உத்தரவிடப்பட்டது. தற்போது அங்கீகாரத்தை புதுப்பிக்க கோரியவர்களே இப்போது தாங்கள் தான் சாட்சி என  கூறுகின்றனர். இதை தான் ஊழல் எனக் கூறுகின்றனர். விசாரணையில் எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த விவகாரத்தில் நியாயமான சுதந்திரமான விசாரணை தேவை. அதுமட்டுமில்லாமல் நீதிமன்ற உத்தரவின்படி அன்பில் மகேஷுக்கு முதல் வகுப்பு சிறை வழங்கப்படவில்லை, சரியான உணவு வழங்கப்படவில்லை.

மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்படுவதால், 2 முதல் 4 கிலோ வரை அவருடைய உடல் எடை குறைந்துவிட்டது. நீதிமன்றம் கூறிய பிறகு கூட வீட்டு உணவு வழங்கப்படவில்லை. அதனால் அன்பில் மகேஷுக்கு வீட்டு உணவு வழங்கப்பட வேண்டும். மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாபுக்கு கூட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. ஆனால் நான் சிறையில் தூங்கும் போது விளக்கை எரியவிட்டனர். வீட்டு உணவு, மருந்து வழங்க வேண்டும் என்பது கோரிக்கை, மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும். அவர் எங்கும் தப்பி ஓடமாட்டார். குற்றம் நிரூபிக்கும் வரை அவர் நிரபராதி தான். பணம் கேட்டதாகவோ, வாங்கியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. அரசியல் காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்’ என வாதிடப்பட்டது.