தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார்.
அன்று மாலை, கைது செய்யப்ப்பட்ட அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் அங்கு குவிந்தனர்.
மேலும் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்யவிடாமல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, எம்.பி கலாநிதி வீராசாமி ஆகியோர் மீது வேப்பேரி போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், இன்று (30-10-26) வேப்பேரி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விசாரணைக்காக ஆஜரானார். ஏற்கெனவெ இந்த வழக்குத் தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
