நாகப்பட்டினம் : தேர்தல் களத்திற்கு சசிகலா வந்துவிட்டதால், இபிஎஸ் ஐஅவர் பார்த்துக்கொள்வார், நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம் என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
தி.மு.க., கூட்டணியில், நாகை மாவட்ட சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் ஜவாஹிருல்லா, புகழேந்தி, லதா ஆகியோருக்கு ஒட்டு கேட்டு நாகையில் உதயநிதி பேசியதாவது:டெல்டாக்காரன் என்ற உரிமையில் உங்கள் முன் நிற்கிறேன். நான் போட்டோவை காட்டினால் இபிஎஸ்க்கு கோபம் வருகிறது. டில்லி அணியா, தமிழ்நாடு அணியா என்பது தான் சட்டசபை தேர்தலில் போட்டி. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவர். டில்லி அணிக்கு மோடி தலைவர் அவ்வளவுதான்.
தமிழகத்திற்கு மத்திய அரசு ஏதாவது ஒரு திட்டத்தை கொடுத்துள்ளதா, தேர்தல் என்பதால் மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு வருகிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு டில்லியில் இருந்து பணம் வருவதில்லை.
அரசியலில் முரட்டு தொண்டர்கள் இருப்பார்கள். ஆனால் இபிஎஸ் தான் மோடியின் நம்பர் 1 முரட்டு அடிமை. உதயநிதிக்கு எந்த அனுபவமும் கிடையாது என்கிறார். செத்து போ என கூறிவிட்டார். என் உயிரை வாங்குகிறான். பால்டாயில் குடித்து சாவு என்கிறார். காலில் விழுந்து பதவி வாங்கிய அனுபவம் எனக்கு கிடையாதுதான். சசிகலா காலை பிடித்து தான் பதவி வாங்கினார்.
மரியாதை நிமித்தமாக நீங்கள் காலில் விழுந்தது தப்பு கிடையாது. சசிகலா காலை வாரி விட்டதுதான் தப்பு என்கிறோம். இப்போது சசிகலா தேர்தல் களத்திற்கு உள்ளே வந்துவிட்டார். அவர் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். இனிமே பெரியவர்கள் அவர்களே பேசிக்கொள்ளட்டும். இனிமே நமக்கு வேலையில்லை வேடிக்கை மட்டும் பார்ப்போம்.இபிஎஸ் ஐ அடிமையாக பயன்படுத்தி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் பயன்படுத்த மோடி பார்க்கிறார். எப்போதும் தமிழ்நாடு டில்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான்.இவ்வாறு உதயநிதி பேசினார்.
