தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதிதாக களமிறங்கிருக்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக சென்னை, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று (12-04-26) கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக பரப்புரை வாகனத்தில் பரப்புரை நடக்கும் இடமாம மகாதானபுரத்திற்கு வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்தார். தமிழ்நாட்டில் ஏ.ஐ. பல்கலைக்கழகம், லஞ்சாம் இல்லாமல் வீட்டு வாசலுக்கே அரசாங்கத்தின் நலத்திட்டங்கள், தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டம், வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும், mytamiltamilnadu.in என்ற இணையத்தளத்தை உருவாக்கி அரசின் பங்களார்களாக பொதுமக்கள் இருப்பார்கள், அதிக வரி இல்லாமல் வருவாயை உயர்த்துவோம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கினார்.
அங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு, தனது பரப்புரை வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார். அப்போது பாதி வழியே வாகனத்தில் இருந்து இறங்கி சைக்கிள் ஓட்டினார். விஜய்யை கண்டதும் நெடுஞ்சாலையில் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதில் சில தொண்டர்கள் அவரை பின் தொடர்ந்து ஓடி வந்தனர். ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்ததால் சைக்கிள் ஓட்டுவதை விட்டுவிட்டு உடனடியாக மீண்டும் பரப்புரை வாகனத்தில் ஏறி விஜய் பயணித்தார்.
அதனை தொடர்ந்து, வாகனத்தை வேறு ஒரு இடத்தில் நிறுத்தி அங்கு கூடியிருந்த தொண்டகளிடம், மீனவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கினார். மூச்சு வாங்கியபடியே பேசத் தொடங்கிய விஜய், “மீனவர்களுக்காக 3 வாக்குறுதிகளை மட்டும் வழங்கிவிட்டு நான் கிளம்பிவிடுகிறேன். உங்களுடைய மீனவ நண்பன் நான் சொல்கிறேன். 1. மீனவர் பாதுகாப்பு உரிமை தொகை. ஆண்டு மீன்பிடி தடை காலத்திற்கான மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8,000லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும். 2.படகு பாதுகாப்பு நிதி. படகுகளை விடுவிப்பது குறித்து தூதரக வழிகளில் பேச்சுவார்த்தை நடத்தும் வரை வங்கி கடன்களை திருப்பி செலுத்தவும், மீனவர்களின் குழுவுக்கு ஆதரவு அளிக்கவும் படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் உடனடி இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.
3. கடல் தாய் வீட்டு வசதி திட்டம். கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து குடிசைகளையும் சிதிலமடைந்த குடியிருப்புகளையும் அகற்றி புயல்களை தாங்கக்கூடிய காலநிலை மாற்றத்தை தாங்கும் வீடுகளை கட்டுவதற்கான ஒரு தனி வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்படும். கடைசியாக மீனவர் எரிப்பொருள் பாதுகாப்பு திட்டம். இயந்திர படகுகளுக்கான மாதாந்திர மானிய டீசல் ஒதுக்கீட்டை 1,800 லிட்டரிலிருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும். ஒரு லிட்டருக்கு ரூ.15 என்ற நிலையான மானியம் படகு உரிமையாளரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இதெல்லாம் ஒரு சின்ன சாம்பிள் தான். இது ஏதோ தேர்தலுக்காக திமுக தருகிற மாதிரி வாயில் வடை சுடுறது கிடையாது. உண்மையாக உங்களை நேசிக்கிறதுடைய வெளிப்பாடு” என்று கூறினார்.
