ராமதாஸ் வீட்டுக்குச் சென்ற அன்புமணி; தீவிர பரப்புரைக்கிடையே திடீர் விசிட்!

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காலப்போக்கில் பெரிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால், பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் இருவர் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர்.

பா.ம.க கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகிய 3 நீதிமன்றங்களுக்கு ராமதாஸ் மாறி மாறி சென்று வழக்கு தொடுத்திருந்தாலும் அனைத்திலும் அன்புமணிக்கு சாதகமான உத்தரவுகளே வந்து கொண்டிருக்கிறது. இது ராமதாஸூக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அன்புமணி அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டு வருகிறார். பா.ம.கவின் மாம்பழம் சின்னம் அன்புமணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்ததை தொடர்ந்து அன்புமணி தலைமையிலான பா.ம.க, மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறது. இது ஒருபுறமிருக்க ராமதாஸ், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறார்.

இப்படியாக இருவரும் தனித்தனியாக தேர்தலை சந்திக்கும் இந்த பரபரப்பான சூழலில், இன்று (12-04-26) திடீரென தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்கு அன்புமணி சென்றார். அங்கு அவர், அவரது தாய் சரஸ்வதியிடம் ஆசி வாங்கிவிட்டு அவருடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கடலூருக்கு சென்ற போது வழியில் விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்கு சென்று தாயை சந்தித்துச் சென்றுள்ளார். 

Source link