பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காலப்போக்கில் பெரிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால், பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் இருவர் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர்.
பா.ம.க கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகிய 3 நீதிமன்றங்களுக்கு ராமதாஸ் மாறி மாறி சென்று வழக்கு தொடுத்திருந்தாலும் அனைத்திலும் அன்புமணிக்கு சாதகமான உத்தரவுகளே வந்து கொண்டிருக்கிறது. இது ராமதாஸூக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அன்புமணி அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டு வருகிறார். இது ஒருபுறமிருக்க ராமதாஸ், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறார்.
இந்த நிலையில், சேலம் பள்ளப்பட்டியில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஆர் அருளை ஆதரித்து ராமதாஸ் இன்று (12-04-26) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தை முடித்த சிறிது நேரத்திலேயே ராமதாஸுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த நிர்வாகிகள், அவரை குண்டுகட்டாக தூக்கி சேலம் காந்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
