தவெக மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சி உறுப்பினரான அஜிதா ஆக்னல், இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி அஜிதா ஆக்னல் என்பவர், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைனை அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே பல்வேறு பணியாற்றி வந்த அஜிதா, கட்சி தொடங்கிய பின் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.
இதில் அதிருப்தியடைந்த அஜிதா, 15க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தவெக தரப்பிலோ அல்லது விஜய் தரப்பிலோ, அஜிதாவிடம் பேசி ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், அஜிதாவுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என தவெகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூறியிருந்தனர்.
அதன்படி ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அஜிதா நம்பியிருந்தார். ஆனால், தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டார். இதனால் மீண்டும் அஜிதாவும் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்திக்குள்ளாகினர். வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து, அஜிதாவின் ஆதரவாளர் ஒருவர், தனது வாகனத்தில் இருந்த தவெக கொடியை அகற்றி தனது எதிர்ப்பை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சூழலில், கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய், தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த போது அவரை வரவேற்க அஜிதா செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஜிதா திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை இன்று (12-04-26) நேரில் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார்.
